தமிழகத்தில் அமுதா, ராதாகிருஷ்ணன் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மாநாகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்த குமரகுருபரன் ஐஏஎஸ், சென்னை மாநாகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்த கோபால் ஐஏஎஸ், தற்போது கால்நடைத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். சிட்கோ மேலாண்மை இயக்குநராக செயல்பட்டு வந்த மதுமதி ஐஏஎஸ், பள்ளிக் கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்பக் கல்வி ஆணையராக இருந்த வீரராகவ ராவ், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்த குமார் ஜெயந்த் ஐஏஎஸ் தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக இருந்த ராஜாராமன் ஐஏஎஸ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஆட்சியராக இருந்த விஷ்ணு சந்திரன் பொதுத் துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை ஆட்சியராக இருந்த வளர்மதி ஐஏஎஸ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், ராணிப்பேட்டை புதிய ஆட்சியராக சந்திரகலா ஐஏஎஸ், புதுக்கோட்டை ஆட்சியராக அருணா ஐஏஎஸ், நீலகிரி மாவட்ட ஆட்சியராக லக்‌ஷ்மி பவ்யா டன்னீரு ஐஏஎஸ், தஞ்சை மாவட்ட ஆட்சியராக பிரியங்கா ஐஏஎஸ், நாகை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

கடலூர் ஆட்சியராக சிபி ஆதித்ய செந்தில் குமாரும், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக அழகுமீனாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். ராமநாதபுரம் ஆட்சியராக சிம்ரன்ஜீத் சிங் கலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரத்தினசாமி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.