இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான கேதார்நாத் சிவன் கோவிலில் 228 கிலோ தங்க நகைகள் மாயமாகிவிட்டதாக ஜோதிர்மட சங்கராச்சாரியார் திடுக்கிடும் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். மேலும் தலைநகர் டெல்லியில் கேதார்நாத் கோவிலை கட்டுவதற்கும் ஜோதிர்மட சங்கரச்சாரியார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜோதிர்மட சங்கராச்சாரியாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி நேற்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வருகை தந்தார். மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை ஜோதிர்மட சங்கராச்சாரியார் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் மும்பை செய்தியாளர்களிடம் ஜோதிர்மட சங்கராச்சாரியார் கூறியதாவது:-
மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே வெளியேற்றப்பட்டது மிகப் பெரும் நம்பிக்கைத் துரோகம். மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக மீண்டும் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்பதன் மூலமே அந்த வலியை போக்கவும் முடியும். நாம் இந்து மதத்தைப் பின்பற்றுகிறவர்கள். நாம் பாவ, புண்ணியங்களில் நம்பிக்கை கொண்டவர்கள். நம்பிக்கை துரோகம் என்பது மிகப் பெரிய பாவச் செயல். மும்பைக்கு வருமாறு உத்தவ் தாக்கரே என்னை அழைத்தார். அதனால்தான் வருகை தந்தேன். டெல்லியில் கேதார்நாத் சிவன் கோவில் கட்டவே கூடாது. கேதார்நாத் சிவன் கோவில் என்பது 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று. 12 ஜோதிர்லிங்கங்கள் எவை என்பது குறித்து சிவபுராணத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் அவற்றில் ஒன்றான கேதார்நாத்தைப் போல இன்னொரு கோவில் கட்டுவது மிகப் பெரிய மோசடியாகும்.
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சிவன் கோவிலில் 228 கிலோ தங்க நகைகள் மாயமாகி உள்ளன. மும்பையைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத தொழிலதிபர் ஒருவர்தான் இந்த தங்க நகைகளைக் கொடுத்தார். 228 கிலோ தங்க நகைகள் மாயம் தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் நடைபெறவில்லை. கேதார்நாத் கோவில் தங்க நகை மோசடி குறித்து யாருமே பேசவில்லையே ஏன்? இதை திசை திருப்ப இப்போது கேதார்நாத் கோவிலை டெல்லியில் கட்டுகிறார்களா? 228 கிலோ தங்க நகை காணாமல் போனதற்கு யார்தான் பொறுப்பு? டெல்லியில் கேதார்நாத் கோவிலைக் கட்ட ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு ஜோதிர்மட சங்கராச்சாரியார் கூறினார்.