காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் நேற்று தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த என்கவுன்ட்டரில் படுகாயமடைந்த ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட 4 பேர் இன்று (ஜூலை 16) அதிகாலை வீரமரணம் அடைந்தனர்.
காஷ்மீரின் டோடோ மாவட்டத்தில் தேசா வனப்பகுதியை ஒட்டிய தாரி கோடே எனுமிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நேற்று (திங்கள்கிழமை) மாலை ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படைப்பிரிவினர் மற்றும் ஜம்மு காஷ்மீரின் காவல்துறையின் சிறப்பு அதிரடிக் குழுவினர் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிரான என்கவுன்ட்டரில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும், அவர்களை விடாமல் ராணுவ வீரர்கள் துரத்தியுள்ளனர். வனப்பகுதிக்குள் தீவிரவாதிகளுடன் என்கவுன்ட்டர் நடந்துள்ளது. இரவு 9 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உள்பட 5 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் ஐவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட 4 வீரர்கள் இன்று காலை உயிரிழந்தனர்.
இந்நிலையில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை தொடர்வதாகவும் வனப்பகுதிக்குள் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவத்தின் 16வது கார்ப்ஸ் பிரிவின் ஒயிட் நைட்ஸ் படைப்பிரிவு எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஜம்மு பகுதியில் ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். கடந்த வாரம் கதுவாவில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது ஜம்முவில் 4 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.