கேரளாவில் பதுங்கியிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!

நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை கேரளாவில் தனிப்படை சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி தனிப்படை போலீஸார், கரூருக்கு அழைத்து வந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்கா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான ரூ 100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலமோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனால் விஜயபாஸ்கர் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். தன்னுடைய அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் விஜபாஸ்கரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், எம்.ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் கரூர் நீதிமன்றத்தில் மீண்டும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கரூர் நீதிமன்றம் கடந்த 2 ஆம் தேதி முதல் உத்தரவை தள்ளி வைத்து இருந்தது. இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர். கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள எம் ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் செல்வராஜ், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரகு ஆகியோரது வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 2 மணி நேரத்துக்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தாளப்பட்டி மணல்மேடு பகுதியில் உள்ல யுவராஜ் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இதில் நிலமோசடி தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா? என தேடினர்.

இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதேபோல் அவரது சசோகதரர் சேகரின் முன் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 14 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீஸார் அவரை தேடி வந்த நிலையில் கேரளாவில் தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை இன்று காலை கைது செய்துள்ளார். இதையடுத்து அவரை கேரளாவில் இருந்து கரூருக்கு அழைத்து வந்து கரூர் காந்தி கிராமத்தில் உள்ள சிபிசிஐடி காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. சுமார் 40 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.