விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) காலையில் பதவியேற்றுக் கொண்டார்.
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ-வாக இருந்த புகழேந்தி சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் காலகட்டத்தில் உடல் நலக்குறைவால் மறைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா வெற்றிபெற்றார். இதையடுத்து, மறுநாள் அவர் சென்னை வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகளிடம் வாழ்த்துப் பெற்றார்.
தொடர்ந்து, இன்று காலை அவர் எம்எல்ஏ-வாக பதவியேற்றுக் கொண்டார். பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் அன்னியூர் சிவா உறுதிமொழி எடுத்து எம்எல்ஏ-வாக பதவியேற்றார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை தொடர்ந்து செய்வேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி வாக்களிக்காதவர்களுக்கும் உண்டான அடிப்படை வசதிகளை செய்துதருவேன்” என்றார்.