ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி சென்னையில் பிரம்மாண்ட பேரணி: பா.ரஞ்சித்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி சென்னையில் வரும் 20-ந் தேதி பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என திரைப்பட இயக்குநரும் நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளருமான பா.ரஞ்சித் அறிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் தப்பி ஓட முயன்ற ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் பா.ரஞ்சித், ஜூலை 20-ந் தேதி சென்னையில் பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ரஞ்சித் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5-ந் தேதி சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இக்கொடூர நிகழ்வு தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும். தலித்துகள் சமூக அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதில் அவர்கள் சந்தித்த இழப்புகள் எண்ணிலடங்கா! இதையெல்லாம் மீறி இயக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் ‘அம்பேத்கரியம்’ என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்த தலைவர்களே நம் பலம்.

100 ஆண்டுகளுக்கும் மேலான தலித் அரசியல் வரலாற்றில் ஒரு தலைவரின் இருப்பே கேள்விக்குறியாகி இருப்பது சுலபமாகக் கடந்து போகக் கூடிய நிகழ்வு அல்ல. ஆம்ஸ்ட்ராங் என்கிற ஆளுமையை வீழ்த்திவிட்டால் அவர் நம்பிய அரசியலும் வீழும் என்கிற சிந்தனை உதிப்பதற்கு முன்பே அதைப் பொய்ப்பிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அம்பேத்கரை நெஞ்சிலேந்தி, ஒரு குடும்பத்துக்கோ, ஒரு இயக்கத்துக்கு நேர்ந்த இழப்பாகக் கருதாமல் ஒவ்வொருவருக்கும் சமூகத்துக்கும் நேர்ந்த இழப்பு என பறைசாற்றுவோம்.

ஜாதி, மதம், இயக்கங்களுக்கு அப்பால் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரியும் வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மைக் குற்றவாளிகளைத் தண்டிக்கவும் தலித் அரசியல் தலைவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஜூலை 20 பேரணியில் திரள்வோம். சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே கூடி இராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலமாக சென்று நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்போம். இவ்வாறு பா.ரஞ்சித் கூறியுள்ளார்.