கென்யாவில் மனைவி உள்பட 42 பெண்களைக் கொன்றவர் கைது!

கென்யாவில் மனைவி உள்பட 42 பெண்களைக் கொலை செய்த சீரியல் கொலைகாரனை அந்த நாட்டுக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த ஜூலை 11ஆம் தேதி, கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள குப்பை கிடங்கு ஒன்றில், பிளாஸ்டிக் பைகளில் வெட்டப்பட்டும், சிதைக்கப்பட்டும் 9 உடல்கள் கண்டெக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த கொடூர கொலை குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, பாதிப்பக்கப்பட்ட ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட செல்போனை சோதனை செய்ததில் காலின்ஸ் ஜூமைசி கலுஷா என்ற 33 வயது நபர் ஒருவரின் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், இவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக, இந்த நபரைத் தேடி சென்றுள்ளனர். அவர் மதுக்கடை ஒன்றில் இருப்பது தெரியவரவே, கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். காலின்ஸ் ஜோமைசி கலுஷா கடந்த 2022 முதல் தனது மனைவி உள்பட இதுவரை 42 பெண்களைக் கொடூரமாகக் கொன்றதாக ஒப்புக்கொண்டு காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சந்தேக நபர் குற்றம் நடந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள கொலையாளியின் வீட்டிற்கு காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, லேப்டாப், 10 மொபைல் போன்கள், அடையாள அட்டைகள் மற்றும் பெண்களின் உடைகள் உள்ளிட்ட சில பொருள்களை போலீஸார் கைப்பற்றினர். மேலும், பெண்களைக் கொலை செய்து அவர்களின் முகத்தைச் சிதைக்கப் பயன்டுத்தப்படுத்திய கத்தியும், உடல்களை அப்புறப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஒன்பது சாக்குப் பைகளையும் கண்டுபிடித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் குப்பைக் கிடங்கில் பல்வேறு நிலைகளில் சிதைந்த சடலங்களை காவல்துறையினர் மீட்டனர். கொலைசெய்யப்பட்ட பெண்கள் அனைவரும் 18 வயது முதல் 30 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் ஒரே மாதிரியாகக் கொல்லப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. செயல்படாத பல்வேறு குவாரியில் இதுவரை ஒன்பது பேரின் சடலங்கள் கண்டெடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு வருட இடைவெளியில் தொடர்ந்து 42 பெண்களை காவல்துறையின் கவனத்திற்கு வராமல் எப்படிக் கொல்லப்பட்டனர் என்று கென்யா மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். செயல்படாத குவாரியில் காவல்துறையினர் உடல்களைத் தேடி வருவதோடு, கொலை செய்ததற்கான காரணத்தையும் குற்றவாளியிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.