தங்கள் நாட்டின் நாடகங்களை பார்த்ததற்காக வடகொரியாவில், பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டதாக தென்கொரிய செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.
வழக்கமாக வடகொரியாவில் கறாரான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் தென் கொரிய மற்றும் அமெரிக்க ஆதரவு செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது மற்றொரு செய்தியை வெளியிட்டுள்ளன. அதாவது தங்கள் நாட்டின் நாடகங்களை பார்த்ததற்காக வடகொரியா அரசு பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு மரண தண்டனையை கொடுத்திருக்கிறது என தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. Chosun TV மற்றும் Korea JoongAng Daily உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இது குறித்து தென் கொரிய அரசு அதிகாரிகளோ, வடகொரிய அரசு அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. எனவே இந்த செய்தியின் உண்மை தன்மையை பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தென் கொரிய செய்தி ஊடகத்தால் கூறப்பட்டிருப்பதாவது, “வடகொரியாவிலிருந்து வெளியேறியவர்களால், அந்நாட்டு எல்லையில் சில யுஎஸ்பிக்கள் ரகசியமாக கசியவிடப்படுகின்றன. இதன் மூலம் தென் கொரியாவின் சீரியல்கள் வடகொரியாவுக்குள் நுழைகிறது. வடகொரிய அதிகாரிகள் கடுமையான சட்டங்கள் மூலம் அந்நாட்டின் குடிமக்களை கொடுமைப்படுத்துகின்றனர். வடகொரியாவின் பிற்போக்கு சித்தாந்தம் மற்றும் கலாச்சார நிராகரிப்பு சட்டம் உள்ளிட்டவற்றால் தென் கொரியா மற்றும் ஜப்பானிய படங்கள் வடகொரியாவுக்குள் நுழைவது தடுக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அண்டை நாடுகளின் படங்களை பார்த்ததற்காக ஒருவர் கொல்லப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த 2022ம் ஆண்டு கொரிய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அடங்கிய பெண்டிரைவ் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ததாக ஒருவரை வடகொரிய அரசு சுட்டுக்கொன்றது. இதனை ஐ.நா உறுதி செய்திருக்கிறது. அதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு இளைஞர்களுக்கு k pop வீடியோவை பார்த்ததற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகின. இப்படி தொடர்ந்து செய்திகள் தென் கொரிய மற்றும் அமெரிக்க ஆதரவு செய்தி ஊடகங்களால் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் இதன் உண்மை தன்மை குறித்த எந்த சரிபார்ப்பும் செய்யப்படுவதில்லை. தென் கொரிய அதிகாரிகள் கூட இது குறித்து உறுதியாக எதையும் பொதுவெளியில் பேசுவதில்லை. வடகொரிய அதிகாரிகளும் இதற்கு மறுப்பு தெரிவிப்பதில்லை. எனவே சில நேரங்களில் இந்த செய்திகள் வெறும் செய்திகளாகவே சென்றுவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.