ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 16) காலை ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. முன்னதாக, அரசியல் கட்சியினர் பணத்தை கொடுத்து வாக்காளர்களை கவர்ந்து விடக்கூடாது என்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு ரயிலில் சோதனை நடத்தியபோது கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தைக் கொண்டு சென்றதாக பாஜக நெல்லை வேட்பாளரும் எம்எல்ஏ-வுமான நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் சென்னை திரு.வி.க.நகரைச் சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், ஸ்ரீவைகுண்டம் பெருமாள் ஆகியோரை தாம்பரம் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதை நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்தார். இது ஒருபுறமிருக்க இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, ரயிலில் பணத்துடன் பிடிபட்ட சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஸ்ரீவைகுண்டம் டிரைவர் பெருமாள் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். பணம் கை மாறியதாகக் கூறப்படும் தமிழக பாஜக வர்த்தக பிரிவு தலைவர் கோவர்தனுக்கு சொந்தமான சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள உணவகம், நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
கோவையில் உள்ள தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரின் வீட்டுக்குச் சென்றும், சிபிசிஐடி போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்பு செயலாளர் கேசவவிநாயகன், கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேருக்கும் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. இதில், கேசவ விநாயகன் ஆஜராகி விளக்கம் அளித்தார். பாஜக மாநில பொருளாளரான எஸ்.ஆர்.சேகருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் நேரில் ஆஜராகாமல் விலக்கு கேட்டு நீதிமன்றத்தை நாடினார். பின்னர் நீதிமன்றம் வலியுறுத்தியதையடுத்து தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று அண்மையில் அவரும் விசாரணக்கு ஆஜரானார்.
இந்நிலையில் பாஜக நிர்வாகியும், எம்எல்ஏ-வுமான நயினார் நாகேந்திரன் இன்று காலை சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீஸார் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அளிக்கும் பதில்கள் அனைத்தும் எழுத்து பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.