குறிப்பிட்ட பணிகளுக்கு கன்னட மக்களுக்கே 100% இடஒதுக்கீடு: கர்நாடக அரசு!

கர்நாடகாவில் அமைச்சரவை கூட்டங்களில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தனியார் நிறுவனங்களில் ‘குரூப் சி & டி’ பதவிகளில் கன்னடர்களுக்கு 100% இடஒதுக்கீடு கட்டாயமாக்கும் மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் “சி மற்றும் டி” கிரேடு பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை பணியமர்த்துவது கட்டாயமாக்கும் மசோதாவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா இனி சட்டசபையில் தாக்கல் ஆகி அது ஆளுநருக்கு அனுப்பப்படும். ஆனால் ஆளுநர் ஒப்புதல் தருவது சந்தேகம்தான். ஏற்கனவே குஜராத் போன்ற மாநிலங்களில் இது போன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டு அது கோர்ட்டில் நிற்காமல் போனது. இந்தியர்களின் அடிப்படை உரிமைகளை எதிர்த்து சட்டம் கொண்டு வந்ததாக கூறி இந்த சட்டங்கள் பல மாநிலங்களில் கோர்ட் மூலம் நீக்கப்பட்டது. இந்த நிலையில்தான் கர்நாடக அரசு இதே சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

தனியார் நிறுவனங்களில் ‘குரூப் சி & டி’ பதவிகளில் கன்னடர்களுக்கு 100% இடஒதுக்கீடு கட்டாயமாக்கும் மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது போக கர்நாடகாவில் நிர்வாகப் பணிகளில்.. அதாவது மேனேஜர் பொறுப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 50% இடஒதுக்கீடு மற்றும் மேலாண்மை அல்லாத பதவிகளில் 75% இடஒதுக்கீடு கட்டாயப்படுத்தும் மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூர் மக்களுக்கு நிறுவனங்களில் வேலை கிடைக்கவில்லை என்றால், தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் விதிகளில் தளர்வு கோரி அரசிடம் முறையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 15 ஆம் தேதி முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை தரும் கர்நாடக மாநில வேலைவாய்ப்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிறுவனங்கள் 50% நிர்வாக பதவிகளிலும் 75% நிர்வாகமற்ற பதவிகளிலும் உள்ளூர் மக்களை நியமிக்க வேண்டும் என்று இதில் கூறப்பட்டு உள்ளது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர் மற்றும் 15 ஆண்டுகள் மாநிலத்தில் வசிக்கும் மற்றும் கன்னடத்தை தெளிவாகப் பேசவும், படிக்கவும் மற்றும் எழுதவும் திறன் கொண்டவர் மற்றும் நோடல் ஏஜென்சியால் நடத்தப்பட்ட தேவையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும். இவர்களுக்கு மட்டுமே நிறுவனங்கள் 50% நிர்வாக பதவிகளிலும் 75% நிர்வாகமற்ற பதவிகளிலும் வேலை கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

மாநிலத்தில் வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பதையும் இந்த மசோதா கூறி உள்ளது. மசோதாவில் உள்ள விதிகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு ₹10,000 முதல் ₹25,000 வரை அபராதம் விதிக்கப்படும், மேலும் உள்ளூர் ஆட்களை வேளைக்கு அமர்த்ததாக நிறுவனங்களுக்கு மசோதாவின்படி ஒவ்வொரு நாளும் ₹100 வசூலிக்கப்படும். ஒரு வெளியூர் ஆளுக்கு ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்படும்.