இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி, இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. அதேவேளை, டெல்லி மதுபான கொள்ளையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அதேவேளை, இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து வருகிறார். அந்த வகையில் அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20ம் தேதி டெல்லி கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி ஐகோர்ட் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஜூலை 12ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், சிபிஐ பதிவு செய்துள்ள ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி கிருஷ்ணா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். அதேவேளை, கெஜ்ரிவால் தரப்பில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி, இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார். அதேவேளை, சிபிஐ வழக்கில் தனக்கு வழக்கமான ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு வரும் 29ம் தேதி டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்க வேண்டும் என்று சிபிஐ விரும்பியதால், அவரை வஞ்சகமாக கைது செய்துள்ளது. எனக்கு சாதகமாக மூன்று உத்தரவுகள் என்னிடம் உள்ளன. ஒன்று, தேர்தல் பிரச்சாரத்தின் போது உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன், இரண்டாவது தற்போது வழங்கப்பட்டிருக்கும் இடைக்கால ஜாமீன். மிகக் கடுமையான பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், இந்த நீதிமன்றத்தால் அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் ஒரு குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால் துரதிருஷ்டவசமாக இது ஒரு காப்புறுதி கைதாகும். சிபிஐ கைது செய்ய விரும்பவில்லை, அதனிடம் கைதுக்கான தெளிவான நோக்கமோ, பொருளோ இல்லை. ஆனால் மற்ற வழக்குகளில் (அமலாக்கத்துறை) கெஜ்ரிவால் வெளியே வந்துவிடுவார் என்று சிபிஐ உணர்ந்தது. அதனால் அவரைக் கைது செய்தது.

அவர் ஒரு முதல்வர், தீவிரவாதி இல்லை. அவர் யாரையும் கடத்தவில்லை. ஆதாரத்தில் குறுக்கிடுபவர் இல்லை. சிபிஐ-ல் உளவியல் ரீதியாக மாற்றத்தின் காற்று வீசுகிறது என்று தெளிவாக தெரிகிறது. நான் சிபிஐயை குறைகூற விரும்பவில்லை. இந்தக் காற்று வேறு சிலரின் மனதில் வீசுகிறது” என்று தெரிவித்தார்.

சிங்வி தனது வாதத்தின் போது பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைது பற்றியும் கூறிப்பிட்டார். அவர் “மூன்று நாட்களுக்கு முன்பு இம்ரான் கான் ஒரு வழக்கில் விடுவிக்கப்பட்டார், ஆனால் மற்றொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்” என்றார்.

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை தினத்தில் வழக்கை நடத்திய நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, கெஜ்ரிவால் மற்றும் சிபிஐ தரப்பு வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதங்களைக் கேட்டறிந்து மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார். மேலும், உயர் நீதிமன்றம் அவரது வழக்கமான ஜாமீன் மனுவை ஜூலை 29 அன்று கூடுதல் வாதங்களுக்குப் பட்டியலிட்டுள்ளது.