அமுதா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது!

உள்துறை செயலாளாக இருந்த அமுதா ஐஏஎஸ் கடந்த 16ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது அமுதா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்துறை செயலாளராக இருந்தவர் அமுதா ஐஏஎஸ். உள்துறையை முதல்வர் ஸ்டாலின் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் அமுதா ஐஏஎஸ் அந்த பொறுப்பில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி மற்றும் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட சம்பவங்களால் மாநில அரசு மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து அதிரடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் அமுதா ஐஏஎஸ்சும் தப்பவில்லை. உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு கடந்த 16ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதன்மூலம் முதல்வர் ஸ்டாலினின் துறையில் இருந்து அவர் மாறும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தான் இன்று அமுதா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அமுதா ஐஏஎஸ்க்கு முதல்வரின் முகவரி பிரிவின் சிறப்பு அதிகாரி என்ற பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை செயலாளர் பதவியுடன் முதல்வரின் முகவரி பிரிவின் சிறப்பு அதிகாரியாக செயல்பட உள்ளார். இந்த முதல்வரின் முகவரி பிரிவு என்பது முதல்வரின் முகவரி திட்டம், மக்களுடன் முதல்வர் மற்றும் குறை தீர்க்கும் திட்டங்கள் மூலம் பொதுமக்களின் புகார்களுக்கு தீர்வு வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அமுதா ஐஏஎஸ்க்கு இந்த பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மீண்டும் அவர் முக்கியத்துவம் பெற்றுள்ளார்.