கப்பலூர் சுங்க சாவடியை மூட கோரி திருமங்கலத்தில் ஜூலை 30-ல் பந்த்!

கப்பலூர் சுங்க சாவடியை இழுத்து மூட வலியுறுத்தி மதுரை அருகே திருமங்கலத்தில் வரும் 30-ந் தேதி பொதுமக்கள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடி விதிமுறைகளை மீறி நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளேயே இருக்கிறது; ஆகையால் இதனை அகற்றியே ஆக வேண்டும் என 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் போராட்டம் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்துள்ளது. மதுரையை அடுத்து தென் மாவட்ட நகரங்களை நோக்கி செல்லும் வாகனங்கள் கப்பலூர் சுங்க சாவடியை கடந்துதான் செல்ல வேண்டும். கப்பலூர் சுங்க சாவடிக்கு எதிராக அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கப்பலூர் சுங்க சாவடி பணியாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து மோதல்களும் நடைபெற்று வருகின்றன.

அண்மையில் உள்ளூர் வாகனங்கள் சுங்க சாவடி சாலையை பயன்படுத்தியதற்கு ரூ4 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என கப்பலூர் சுங்க சாவடி தரப்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு எதிராக திருமங்கலம் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து உச்சப்பட்டி, தர்மத்துப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு செல்லக் கூடிய சாலைகளையும் கப்பலூர் சுங்க சாவடி நிர்வாகம் மூடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது மக்களை கொந்தளிக்க வைத்தது. இதனால் சுங்க சாவடி முன்பாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இத்தகைய மோதல் போக்கின் உச்சமாக கடந்த வாரம் கப்பலூர் சுங்க சாவடியை இழுத்து மூடும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் பல மணிநேரம் நடைபெற்றது. உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் ரூ340 கட்டணம் வசூலிக்கவும் கப்பலூர் சுங்க சாவடி நிர்வாகம் திட்டமிட்டதும் பெரும் கோபத்துக்கு காரணமானது. இந்த முற்றுகைப் போராட்டத்தில் அதிமுகவும் பங்கேற்றது.

10 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் கப்பலூர் சுங்க சாவடி நிர்வாகத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்தே வரும் 30-ந் தேதி திருமங்கலத்தில் பொதுமக்கள் முழு அடைப்புப் போராட்டம் (பந்த்) நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். திருமங்கலத்தில் நடைபெற்ற கப்பலூர் சுங்க சாவடி எதிர்ப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருமங்கலத்தைச் சுற்றிய கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.