வங்கதேசம் கலவரம்: சென்னை அழைத்துவரப்பட்டனர் தமிழ்நாடு மாணவர்கள்!

வங்க தேசத்தில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையின் காரணமாக வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு செலவில் விமான பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டு 49 மாணவர்கள் கொல்கத்தா, குவஹாத்தி, அகர்தலா ஆகிய விமான நிலையங்களில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப இயலாத சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விவரங்கள் பெறப்பட்டது. மேலும், வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து, அங்குள்ள தமிழ் மாணவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்களது கோரிக்கைகள் பெறப்பட்டது. அவர்களது நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

மாணவர்களின் கோரிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையின் காரணமாக, முதற்கட்டமாக நேற்று (ஜூலை 21), தமிழ்நாடு அரசு செலவில் விமான பயணச்சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டு 49 மாணவர்கள் கொல்கத்தா, குவஹாத்தி, அகர்தலா ஆகிய விமான நிலையங்களில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

சென்னை விமான நிலையம் வந்தடையும் மாணவர்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் பா. கிருஷ்ணமூர்த்தி I.O.F.S வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், ஈரோடு, திருவள்ளூர், விழுப்புரம், தென்காசி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 49 பேர் சென்னை அழைத்து வரப்பட்டனர். மேலும், அடுத்த கட்டமாக மாணவர்களை வங்கதேசத்திலிருந்து தமிழ்நாடு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.