தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா பதவியை ராஜினாமா செய்தார்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்த பிறகும் அந்த கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நீடித்தது. அண்ணாமலை உடன் இணைந்து பாஜக கூட்டணியில் தமாகா தொடர்வதாக அறிவித்திருந்தார் ஜிகே வாசன். இந்நிலையில், பாஜக கூட்டணி சார்பாக மூன்று லோசபா தொகுதிகளில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில், நீண்ட காலம் தான் வகித்து வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் யுவராஜா.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனிடம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வது குறித்து முறைப்படி கடிதத்தை யுவராஜா கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதில், எதிர்வரும் காலங்களில் கட்சியின் கட்டமைப்பை சிறப்பாக கட்டமைக்க அயராது பாடுபடுவேன் என்றும் தலைவரான உங்களுடன் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பயணித்து, அயராது உழைத்து பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என ஜிகே வாசன் அறிவித்த சிறிது நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கே சென்று சுமார் ஒரு மணி நேரம் அவருடன் தனியாக பேசிவிட்டு வந்தார் யுவராஜா. அது குறித்து அப்போது கேட்டதற்கு, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் இவ்வளவு நாள் அதிமுக கூட்டணியில் த.மா.கா இருந்த காரணத்தால் எடப்பாடி பழனிசாமியிடம் பேச வந்ததாகவும் குறிப்பிட்டார். தமாகாவின் கூட்டணி நிலைப்பாடு காரணமாக தமாகா நிர்வாகிகள் பலர் கட்சி தாவினர். ஆனால், தனக்கு சீட் கொடுக்காவிட்டாலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்து வந்த யுவராஜா, தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தமாகாவுக்கு பலனை கொடுக்காத நிலையில், பல ஆண்டு காலம் தான் வகித்த பதவியை இப்போது ராஜினாமா செய்துள்ளார் யுவராஜா. பதவியை மட்டுமே ராஜினாமா செய்துள்ளதாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வதாகவும் கூறி இருக்கிறார் யுவராஜா.