“மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள், ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் ஆகியவற்றால் தமிழகத்தில் கல்வி, விவசாயம், தொழில், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மேம்பட்டு விவசாயிகள் விவசாயத்திலும், பெண்கள் வாழ்விலும், இளைஞர்கள் வேலை வாய்ப்பிலும் முன்னேற்றம் அடைவார்கள்” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு ஆண்டுக்கான (2024-25) மத்திய அரசின் பட்ஜெட்டை நாட்டு மக்களின் முன்னேற்றம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றை மிக முக்கிய நோக்கமாக கொண்டு தாக்கல் செய்திருப்பது பாராட்டுக்குரியது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது சாதனைக்குரியது. இந்தியாவின் வருங்கால வளர்ச்சியை உறுதி செய்யும் பட்ஜெட் இது. அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கியிருக்கும் நிதியின் மூலம் ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டான பட்ஜெட் இது. குறிப்பாக ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறைக்கு 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, நாடு முழுவதும் 1 லட்சம் மாணவர்களுக்கான கல்விக்கடன் ரத்து, கல்விக் கடன் 10 லட்சம் வரை வழங்கப்படும், பெண்களின் திட்டங்களுக்கு 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, அனைவருக்கும் வீடு என்ற திட்டத்துக்கு மட்டுமே ரூ.2.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, முத்ரா கடன் தொகை வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது, கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டங்களுக்காக ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கிடு, கல்வி, தொழில்திறன் மேம்பாட்டுக்கு 1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு – இப்படி விவசாயம், கல்வி, தொழில், சுகாதாரம், உட்கட்டமைப்பு என அனைத்து துறையின் வளர்ச்சிக்கும் உகந்த பட்ஜெட்டாக அமைந்திருப்பதால் இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்கது.
அந்த வகையில் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள், ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் ஆகியவற்றால் தமிழகத்தில் கல்வி, விவசாயம், தொழில், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மேம்பட்டு விவசாயிகள் விவசாயத்திலும், பெண்கள் வாழ்விலும், இளைஞர்கள் வேலை வாய்ப்பிலும் முன்னேற்றம் அடைவார்கள். மேலும் புதிய வருமான வரி முறையில் உள்ள அம்சங்கள் பெரிதும் பயன் தரும். அனைத்து தரப்பு மக்களுக்குமான, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பட்ஜெட்டாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டானது பாரதப் பிரதமர் மோடியின் ஆட்சியில் மத்திய அரசின் மீது மக்களுக்கு மேலும் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. எனவே பல்வேறு நல்ல அம்சங்களை உள்ளடக்கிய நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வரவேற்று, மத்திய நிதி அமைச்சரை பாராட்டி, வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.