பொதுச் செயலாளராக இபிஎஸ் இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை: டிடிவி.தினகரன்!

பொதுச் செயலாளராக பழனிசாமி இருக்கும்வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை என்று டிடிவி.தினகரன் கூறினார்.

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அமமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமை வகித்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-

தற்போது நடைபெற்ற கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. சட்டப்பேரவை தேர்தலில் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி அல்லது போடியில்நான் போட்டியிடுவதாக வெளியாகும் தகவல் தவறானது.

மத்திய பட்ஜெட், ஏழைகள், விவசாயிகள், மாணவர்களுக்கான தொலைநோக்கு பட்ஜெட். தமிழ்நாட்டுக்கு சிறப்புத் திட்டம் இல்லை என்றாலும், இது நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட். அதிமுகவை பாஜக அழிக்கப் பார்க்கிறது என்பதெல்லாம் பொய். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் டிடிவி.தினகரன் பின்னே அணி திரள்வார்கள் என்றுதான் அண்ணாமலை கூறினார்.

பழனிசாமி ஒரு சுயநலவாதி, பதவி வெறி கொண்டவர். துரோக சிந்தனை கொண்ட அவர்தான் அதிமுக ஒன்றிணைய தடைக்கல்லாக இருக்கிறார். பொதுச் செயலாளராக அவர் இருக்கும்வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற ஆசையில்தான் சசிகலா சுற்றுப்பயணம் செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.