எல்லைப் பிரச்சினை, சீனாவுடனான வர்த்தக சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி இன்று வியாழக்கிழமை மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தார்.
இதுகுறித்து மக்களவைச் செயலாளருக்கு மணீஷ் திவாரி எழுதிய கடிதத்தில், இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை, சமீபத்தில் திறக்கப்பட்ட சேவா சுரங்கப்பதையை சீனா நிராகரித்தது, அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகளை தனது பிராந்தியங்களாக உரிமை கோருவது போன்றவைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:-
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையின் தீவிரம் கருதி இந்த அவையில் பூஜ்ஜிய நேரம், அது தொடர்பான கேள்வி நேரம் மற்றும் அவையின் பிற அலுவல் நேரங்களில் எல்லை பிரச்சினை தொடர்பான விஷயங்களை விவாதிக்க முக்கியத்துவம் தர வேண்டும்.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்தியா சீனா எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது. கிழக்கு லடாக்கில் நமது துருப்புகள் பாதுக்காப்பு பணிகள் மேற்கொள்வதை சீன துருப்புகள் தடைசெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் திறக்கப்பட்ட சேவை சுரங்கப்பதையை சீனா நிராகரித்துள்ளது, மேலும் அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகள் தனது பிராந்தியம் என உரிமை கோரி வருகிறது.
மேலும், 2023 -24 ஆண்டில் சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை 85 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. அந்நாட்டுடனான ஏற்றுமதி 16.65 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இறக்குமதி 101.75 மில்லியன் டாலராக உள்ளது. சீன எல்லை பிரச்சினை, வர்த்தக பற்றாக்குறை குறித்து அரசு அவையில் தெரிவிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். மேலும் இந்த விவகாரத்தை அவையில் எழுப்ப அனுமதிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவை நடவடிக்கைப்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2024 – 25 பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.