கர்நாடகா வழங்கும் நீரின் அளவை கண்காணிக்க தமிழகம் வலியுறுத்தல்!

காவிரி ஆற்றில் கர்நாடக அரசு திறந்துவிடும் நீரின் அளவை கண்காணிக்க வேண்டும் என டெல்லியில் நடந்த‌ காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32வ‌து கூட்டம் டெல்லியில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடகா, கேரளா, புதுச்சேரி சார்பில் அம்மாநிலங்களை சேர்ந்த நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது கர்நாடக அரசின் சார்பில், ‘‘காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட 4 அணைகளும் முழு கொள்ளள‌வை நெருங்கியுள்ளன. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு காவிரி நீர்முறையாக திறக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.

இதற்கு த‌மிழக அரசின் சார்பில், ‘‘இதுவரை கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர்முறையாக வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் குறிப்பிட‌ப்பட்டுள்ள அளவின்படி நீரை கர்நாடகா வழங்க வேண்டும். இதனை மேலாண்மை ஆணையம் கவனமாக கண்காணிக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் 45 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

இறுதியில் பேசிய ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், ‘‘நீரின் அளவை கண்காணிப்பது குறித்து இரு மாநில அதிகாரிகளுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். ஜூலை 30ம் தேதி நடக்கும் காவிரி ஒழுங்காற்று குழுக்கூட்டத்தில் அதுதொடர்பான விவரங்களை இரு மாநில அரசுகளும் தெரிவிக்கலாம்” என்றார்.

இதனிடையே, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 36 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.