பிரான்ஸில் ரயில்கள் மீது தீவைப்புத் தாக்குதல், பயணிகள் பாதிப்பு!

பிரான்ஸ் நாட்டில் ரயில்கள் மீது தீவைப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் அதிவேக ரயில் சேவை பாதிக்கப்பட்டு 8 லட்சம் பயணிகள் பாதிப்படைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியதை முன்னிட்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சில மணி நேரங்கள் முன்பு பிரான்ஸில் அதிவேக ரயில்கள் மீது தீவைப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் பல முக்கிய வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து சீர்குலைந்ததாக பிரான்ஸ் அரசின் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாரிஸ் நகரம் முழுக்க ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காகத் தயாராகி, தொடக்க விழாவுக்காக அதிகபட்சப் பாதுகாப்புகள் போடப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவைக் காண வந்த பெரும்பாலான பயணிகளும், வாரவிடுமுறையைக் கொண்டாட வந்தவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று ஒருநாள் மட்டும் 2.5 லட்சம் பயணிகள் பயணம் செய்ய முடியாமல் போனதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், பயணிகள் யாரும் ரயில் நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் எனவும் ரயில்வே நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சீரமைப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளைத் தொடங்கி விட்டதாகக் கூறியுள்ள ரயில்வே நிர்வாகம், இந்த வார இறுதி முழுக்க சீரமைப்பு பணிகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. ”இது நகரங்களுக்கிடையே இயக்கப்படும் அதிவேக ரயில்களுக்கு எதிராக நடத்தப்பட்டப் பெரிய தாக்குதல். பல வழித்தடங்களில் ரயில் சேவை ரத்து செய்யப்படும். வார இறுதி நாள்கள் முழுக்க பழுதுகள் சரிபார்க்கப்பட்டு முடிக்கும் வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டது தொடரும்” என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் பேட்ரிஸ் வெர்கிரேட் கூறுகையில், “நகர்ப்புற அதிவேக ரயில்களைக் குறிவைத்து நேற்று இரவு ஒருங்கிணைந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச் செயல்களின் காரணமாக இந்த வார இறுதி வரை ரயில்வே போக்குவரத்துக் கடுமையாகப் பாதிக்கப்படும்” என்று கூறினார்.

இந்தத் தீவைப்புத் தாக்குதல்கள் அதிவேக ரயில் போக்குவரத்து வழித்தடங்களான அட்லாண்டிக், நார்ட் மற்றும் எஸ்ட் ஆகிய மூன்று வழித்தடங்களில் பதிவானதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தத் தாக்குதல்களால் பாரிஸின் முக்கிய ரயில் நிலையமான மாண்ட்பர்னேஸ் நிலையம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பாரிஸுடன் பிரான்ஸின் மற்ற நகரங்களையும், அண்டை நாடுகளையும் இணைக்கும் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் வேளையில் பாரிஸுக்கு செல்லும் ரயில்களைத் தடுக்க இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இது தொடர்பான தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

”ரயில் சேவை பாதிப்பால் பயணிகள், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருவதாகவும், அனைத்துப் பிரதிநிதிகளையும் போட்டி நடைபெறும் இடங்களுக்கு அழைத்துச் செல்வது உறுதி செய்யப்படும்” என்று பிரான்ஸ் விளையாட்டுத் துறை அமைச்சர் எமிலி தெரிவித்துள்ளார். மேலும், “விளையாட்டுப் போட்டிகளுக்கு எதிராக சதி செய்வது, சொந்த நாட்டுக்கு எதிராகச் சதி செய்வதைப் போன்றது” என்றும் அவர் கூறியுள்ளார்.