இரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் காலதாமதம் இல்லை: அமைச்சர் ராமச்சந்திரன்!

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எவ்வித காலதாமதமும் இல்லை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறி உள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் இரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை நில எடுப்பு செய்வதில் மாநில அரசு காலதாமதம் செய்து வருவதாக ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் தெரிவித்துள்ளதாக சில நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது தொடர்பாக கீழ்கண்ட விபரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 2021- மே மாதம் முதல் தமிழகத்தில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட இரயில்வே திட்டங்களின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்து பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த இரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளின் மீது தனிகவனம் செலுத்தி விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் இரயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக 2443 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றுள், தூத்துக்குடி- மதுரை (வழி- அருப்புக்கோட்டை) புதிய அகல ரயில்பாதை திட்டத்திற்காக 937 ஹெ ஹெக்டேர் நிலங்களும், திருவண்ணாமலை- திண்டிவனம் புதிய அகல ரயில்பாதை திட்டத்திற்கு 276.00 ஹெக்டேர் நிலங்களும், ஈரோடு மாவட்டத்தில், கதிசக்தி பல்முனை மாதிரி சரக்கு முனையம் அமைக்க 13.00 ஹெக்டேர் ஆக மொத்தம் 1226.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய ஏற்கனவே தமிழ்நாடு அரசால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றிய இரயில்வே துறையினரால் நில எடுப்பிற்கு நிதி ஒதுக்கப்படாததாலும், நில எடுப்புப் பணியிடங்களுக்கான இசைவு வழங்கப்படாததாலும் அப்பணிகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளன.

இதைத் தவிர, எஞ்சியுள்ள நில எடுப்பு செய்யப்பட வேண்டிய 1216.00.00 ஹெக் நிலங்களில் திண்டிவனம்- நகரி அகல ரயில்பாதை, திருவண்ணாமலை திண்டிவனம் அகல ரயில்பாதை, மதுரை- தூத்துக்குடி அகல ரயில்பாதை, மணியாச்சி- நாகர்கோவில் அகல ரயில்பாதை, திருவனந்தபுரம்- கன்னியாகுமரி அகல ரயில்பாதை, தூத்துக்குடி- மதுரை (வழி- அருப்புக்கோட்டை) புதிய அகல ரயில்பாதை, சின்னசேலம்- கள்ளக்குறிச்சி புதிய அகல ரயில்பாதை, மொரப்பூர்- தர்மபுரி புதிய அகல ரயில்பாதை, கொருக்குப்பேட்டை- எண்ணூர் நான்காவது வழித்தடம், செங்கல்பட்டு- விழுப்புரம் அகல ரயில்பாதை, கதிசக்தி பல்முனை மாதிரி சரக்கு முனையம், மயிலாடுதுறை- திருவாரூர் அகல ரயில்பாதை, பட்டுக்கோட்டை நான்குமுனை சந்திப்பு, மன்னார்குடி- நீடாமங்கலம் அகல ரயில்பாதை, சென்னை கடற்கரை- கொருக்குப்பேட்டை மூன்றாவது நான்காவது வழித்தடம், மற்றும் விழுப்புரம்- திண்டுக்கல் அகல இரயில்பாதை ஆகிய திட்டங்களுக்கு 907.33 ஹெக்டேர் நிலங்களுக்கான நில எடுப்புப் பணிகள் முடிவுற்று (அதாவது 74% சதவீதம்) நிலம் இரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முக்கியத் திட்டங்களான திண்டிவனம்- நகரி அகல ரயில்பாதை (97%), மதுரை-தூத்துக்குடி அகல ரயில்பாதை (96%), மணியாச்சி- நாகர்கோவில் அகல ரயில்பாதை (100%), சின்னசேலம்- கள்ளக்குறிச்சி புதிய அகல ரயில்பாதை (81%), கொருக்குப்பேட்டை- எண்ணூர் நான்காவது வழித்தடம் (87%), மயிலாடுதுறை- திருவாரூர் அகல ரயில்பாதை (70%), பட்டுக்கோட்டை நான்குமுனை சந்திப்பு (100%), மன்னார்குடி- நீடாமங்கலம் அகல ரயில்பாதை (100%), சென்னை கடற்கரை- கொருக்குப்பேட்டை மூன்றாவது நான்காவது வழித்தடம் (100%), மற்றும் விழுப்புரம்- திண்டுக்கல் அகல இரயில்பாதை (100%) ஆகிய திட்டங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ளவாறு 81% முதல் 100% வரை நிலம் எடுப்புப் பணிகள் முடிக்கப்பட்டு ஒன்றிய இரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. எஞ்சிய நிலம் எடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இரயில்பாதை அமையவுள்ள அரசு புறம்போக்கு நிலங்களைப் பொறுத்தவரையில், மேற்படித் திட்டங்களைச் செயல்படுத்த எந்தவிதமான தடைகளும் இன்றி அவ்வப்போது அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. சென்னை – கடற்கரை முதல் சென்னை- எழும்பூர் ரயில்நிலையம் வரையிலான நான்காவது வழிப்பாதை அமைத்தல். இந்த வழித்தடத்தில் உள்ள கூவம் ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய நீர்வழிப்புறம்போக்கில் 2875 ச.மீ நிலங்களை மேற்படித் திட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ளத் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள இதர அரசு புறம்போக்கில் 383.5 ச.மீ நிலங்களை இரயில்வே துறைக்கு நில மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 1823.87 ச.மீ நிலம் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலம் என்பதால் அதன் ஒப்புதலுக்காகவும், 278.0 ச.மீ நிலம் இந்திய ரிசர்வ் வங்கியின் நிலம் என்பதால் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்காகவும் நிலுவையில் உள்ளது. இந்நேர்வில் மேற்குறிப்பிட்டுள்ள மத்திய அரசு நிறுவனங்களுடன் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள இரயில்வே துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையிலான புதிய இரயில் தடம் அமைக்கும் திட்டம், சுற்றுலாவினை மேம்படுத்தும் வகையில் 2022ம் ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், சுற்றுச் சூழல் வல்லுநர் குழுவின் அறிக்கையில் இத்திட்டத்தினைச் செயல்படுத்துவது சுற்றுச் சூழல் சமநிலையை பாதிக்கும் என்பதால், சுற்றுச் சூழல் பாதிப்பினை கருத்தில் கொண்டு மேற்படி வழித் தடத்தடமானது புதிய இரயில்வே பாதை அமைக்க உகந்தது அல்ல என்று மேற்படி இரயில் பாதைத் திட்டத்தினைக் கைவிடும்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடம் (Memorandum- Dated: 08.04.2023) கோரப்பட்டது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை முதன்மைப் பொறியாளரின் அறிக்கையின் அடிப்படையில் சுற்றுலாவினை மேம்படுத்தும் வகையில், முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரையிலான 9.5 கி.மீ தொலைவிற்கு சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்படவிருந்த மேற்படி இரயில் பாதைத் திட்டத்தை கைவிட பரிந்துரை செய்யப்பட்டது.

எனவே, தமிழ்நாட்டில் இரயில்வே திட்டங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு மாதமும் போக்குவரத்துத்துறை அரசு செயலாளர் மற்றும் நில நிர்வாக ஆணையர் தலைமையில் சம்பந்தப்பட்ட இரயில்வேதுறை அதிகாரிகள் மற்றும் நில எடுப்பு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, அவ்வப்போது தலைமைச் செயலாளர் தலைமையிலும் மாவட்ட ஆட்சியர்களுடன் இரயில்வே நில எடுப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, இரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளை பொறுத்தவரை இவ்வரசு தனிகவனம் செலுத்தி உரிய காலத்திற்குள் அவற்றை முடிக்கும் வகையில் விரைந்து செயலாற்றி வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.