இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருக்கும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ள கருத்து காசா பிரச்சினையில் அவரின் மாறுபட்ட நிலைப்பாட்டினை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இது அமெரிக்க அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாலஸ்தீன போருக்கு அமெரிக்கா துணை நிற்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்நிலையில், காசா நிலைமையை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது என அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸ், நெதன்யாகுவிடம் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நெதன்யாகு சிறப்புரையாற்றினார். அதில், “எங்கள் எதிரிகள் உங்கள் எதிரிகள். நம் இருவரின் நோக்கமும் ஒன்றுதான். எங்கள் வெற்றி, உங்களுக்கான வெற்றியாகும். நாங்கள் ஈரானுடன் போராடுகிறோம். ஆனால், அமெரிக்காவை பொருத்தவரை உங்களுடைய கொலைகார எதிரியுடன் நாங்கள் போராடுகிறோம். அவர்கள் அமெரிக்காவை தாக்க நினைக்கிறார்கள். அதற்கு முன்னர் மத்திய கிழக்கை கைப்பற்ற வேண்டும். அங்கு பெருமைமிக்க அமெரிக்க சார்பு ஜனநாயக அரசாக இஸ்ரேல் இருக்கிறது. அது ஈரானுக்கு எதிராக போராடி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக எங்களுக்கு ஆயுதங்களை வழங்கியதற்கு நன்றி. அதற்கு பதிலாக அமெரிக்கர்கள் பலரின் உயிரை காப்பாற்றும் அளவுக்கு நாங்கள் உளவு தகவல்களை கொடுத்து வருகிறோம். இப்போது அமெரிக்கா செய்ய வேண்டியது ஆயுத உதவிதான். நீங்கள் ஆயுதங்களை கொடுங்கள். நாங்கள் அவர்களின் கதையை முடிக்கிறோம். ஹமாஸ் சரணடைந்து இஸ்ரேலிய பணயக்கைதிகளை திருப்பி அனுப்பாத வரை காசாவில் போர் தொடரும்” என்று கூறியிருந்தார்.
உலகம் முழுவதும் பாலஸ்தீனம் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போரை தீவிரப்படுத்தும் விதமாக நெதன்யாகு பேசியிருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது. சிறப்புரைக்கு பின்னர் நெதன்யாகு, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸை சந்தித்து பேசினார். அப்போது, போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டிய நேரம் இது என்றும், காசாவின் நிலையை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம் எனவும் கமலா ஹாரிஸ் கூறியிருக்கிறார்.
நெதன்யாகுவுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹாரிஸ் கூறியதாவது:-
தன்னை தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருக்கிறது. ஆனால், கடந்த 9 மாதங்களாக காசாவில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்பது மிக முக்கியம். அங்கு பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. அப்பாவி குழந்தைகளின் உயிரிழப்பு, பசி கொடுமை, புலம் பெயரும் மக்கள் என இந்த கொடுமையை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. உணர்ச்சியற்றவர்களாக நாம் இருக்க முடியாது. குறிப்பாக நான் அமைதியாக இருக்க மாட்டேன். இந்த போர் முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது. பேச்சுவார்த்தைகள் மூலம் போர் நிறுத்தப்பட்டு, பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் நேரம் நெருங்கிவிட்டது. பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டும் நேரம் இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் நெதன்யாகு பேசிக்கொண்டிருந்தபோது வெளியில் போராட்டக்காரர்கள் தீவிரமாக எதிர்ப்பில் ஈடுபட்டிருந்நதனர். வாஷிங்டன் டிசியில் ஒரு கொடி மரத்தில், ஏற்கெனவே ஏற்றி வைத்திருந்த அமெரிக்க கொடியை இறக்கிவிட்டு, பாலஸ்தீன கொடியை போராட்டக்காரர்கள் ஏற்றியிருந்தனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. வாஷிங்டன் மட்டுமல்லாது அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இப்படி இருக்கையில் கமலா ஹாரிஸின் பேச்சு மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது. போரில் இதுவரை 38,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
போர் தொடங்கி 269 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த போரின் நோக்கத்தை இஸ்ரேல் நிறைவேற்றியிருக்கிறதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கான பதிலை இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்திருக்கிறார். “ஹமாஸ் என்பது ஒரு சிந்தனை, ஹமாஸ் ஒரு கட்சி, இது மக்களின் இதயங்களில் வேரூன்றியிருக்கிறது. ஹமாஸை ஒழிக்க முடியும் என்று நினைப்பது தவறு” என்று கூறியுள்ளார். போர் தொடங்கி 8 மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் இதனை ஒப்புக்கொண்டிருக்கிறது. ஹமாஸின் சுரங்கப்பாதைகள், அதன் முன்னணி வீரர்கள் மற்றும் தலைவரை அழித்து அவர்கள் பிடியில் உள்ள 240க்கும் மேற்பட்ட பணயகைதிகளை மீட்க இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. ஆனால், 8 மாதங்கள் ஆன பின்னரும் இந்த இலக்கை எட்ட முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது.
இஸ்ரேல் பிரச்சினை குறித்து வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், “இஸ்ரேல் – ஹமாஸ் படையினர் இடையேயான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் சில சிக்கல்கள் நிலவுகின்றன. இருதரப்புமே சில சமரசங்களை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.” என்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ள சூழலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமெரிக்கப் பயணம் கவனம் பெற்றுள்ளது. நெதன்யாகு வருகையை ஒட்டி வெள்ளை மாளிகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முதலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் சந்தித்தார். அப்போது ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களின் குடும்பத்தினரும் இருந்தனர். அந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகள், போர் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பிணைக் கைதிகள் நாடு கொண்டுவரப்படுவார்கள் என நம்புவதாகத் தெரிவித்தனர்.