நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், இது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் விமர்சித்துள்ளார்.
2024 – 25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், பிகார் மற்றும் ஆந்திர பிரதேசத்துக்கு திட்டங்கள், நிதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்திற்கென எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. பாஜக ஆட்சிக்கு ஆதரவளிக்கும் பிகாரில் ஆளும் நிதிஷ்குமார், ஆந்திராவை ஆளும் சந்திரபாபு நாயுடுவை திருப்திப்படுத்தும் விதமாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் குற்றம்சாட்டு எழுந்தது.
பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறவில்லை என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இதனைக் கண்டிக்கும் விதமாக பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார். அத்துடன், பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடைபெறும் எனவும் திமுக அறிவித்துள்ளது.
அதே சமயம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ, பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை என்றதோடு, மாநிலங்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதற்காக புறக்கணித்து விட்டோம் என்று சொல்லிவிட முடியாது என விளக்கம் அளித்தார். நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவுக்கு ஜி.கே.வாசன், ஓபிஎஸ் உள்ளிட்ட பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பிரதமர் தலைமையில் நடைபெறவிருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள, போலி ஜனநாயகத் தூதுவரான மு.க.ஸ்டாலின், இந்த அறிவிப்பின் மூலம் தமிழக மக்களை நேரடியாக வஞ்சிக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.
நிதி ஆயோக் கூட்டம் என்பது அனைத்து மாநிலங்களும் தங்களுக்குத் தேவையான குறைகளை எடுத்துச் சொல்லி நிவர்த்தி பெறுகின்ற உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாகும் என்ற எல்.முருகன், இக்கூட்டத்தில் தனது கருத்துகளை எடுத்துச் சொல்லாமல், கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பது தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறார்.. இது மிகப்பெரிய பாவமும் கூட என்று விமர்சித்தார்.
மேலும், உண்மையில் தமிழக மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட முதல்வர், இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தை புறக்கணிப்பது நியாயமாகுமா? இது தமிழக மக்களுக்கு இழைக்கும் அநீதி இல்லையா? என்றும் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.