வளர்ச்சியடைந்த மாநிலங்களே வளர்ந்த இந்தியாவை உருவாக்கும்: பிரதமர் மோடி!

“வளர்ச்சியடைந்த மாநிலங்களே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும்” என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

நிதி ஆயோக் அமைப்பின் 9-வது ஆட்சிக்குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று (ஜூலை 27) நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி பேசியது குறித்து நிதி ஆயோக் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது:-

2047-ல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியனின் லட்சியம். மக்களுடன் நேரடியாக இணைந்திருப்பதால், இந்த இலக்கை அடைய மாநிலங்கள் செயலில் பங்கு வகிக்க முடியும். இந்த தசாப்தம் தொழில்நுட்ப மற்றும் புவி – அரசியல் மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகள் நிறைந்தது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, சர்வதேச முதலீடுகளுக்கு உகந்ததாக நமது கொள்கைகளை உருவாக்க வேண்டும். இது இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான முன்னேற்றத்திற்கான படிக்கல். நாடு சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தொற்றுநோயை நாம் தோற்கடித்துள்ளோம். நமது மக்கள் உற்சாகமும் நம்பிக்கையும் நிறைந்தவர்கள். அனைத்து மாநிலங்களின் கூட்டு முயற்சியுடன் 2047ல் வளர்ச்சி அடைந்த இந்தியா பற்றிய நமது கனவுகளை நிறைவேற்ற முடியும். வளர்ச்சியடைந்த மாநிலங்களே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும்.

இந்தியா ஓர் இளமையான நாடு. இந்திய பணியாளர்கள் உலகம் முழுவதையும் ஈர்த்து வருகிறார்கள். நமது இளைஞர்களை, திறமையான மற்றும் வேலை வாய்ப்புள்ள பணியாளர்களாக மாற்றுவதை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும். திறன், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் வேலை சார்ந்த அறிவு ஆகியவை வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் இலக்கை அடைய மிகவும். இந்திய சமூகத்திலும், பொருளாதாரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தேசிய கல்விக் கொள்கை சீர்திருத்தங்கள், முத்ரா, விஸ்வகர்மா, ஸ்வநிதி திட்டங்கள், குற்றவியல் நீதி அமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் போன்றவற்றை பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.