ஏன் உங்களது அப்பா வீட்டுச் சொத்திலா நான் 10.5 சதவீதம் கேட்கிறேன்? இது எங்கள் நாடு, இது எங்கள் பூமி, இது எங்களால் வளர்ந்தது, இது எங்கள் மண், உனக்கு இங்கே என்ன வேலை? உன்னிடம் போய் நான் 10.5 சதவீதம் கேட்க வேண்டுமா? என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியிருந்தார். இந்நிலையில் வயதில் மூத்தவர் என்றாலும், முதலமைச்சருக்கான மரியாதையை ராமதாஸ் கொடுக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டிவனம் அருகே பாமக நிறுவனர் ராமதாஸின் 86வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையொட்டி மரக்கன்று நடும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாமக கௌரவ தலைவர் ஜி கே அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு சிலை அருகே 86 மரக்கன்றுகளை ராமதாஸ் நட்டு வைத்தார். தொடர்ந்து பேசிய அவர்,” நான் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து 35 நிமிடம் வகுப்பெடுத்தேன். அப்போது, இந்த ஊமை ஜனங்களுக்கு உங்களை விட்டால் யார் செய்யப் போகிறார்கள்? என்றேன். ஆனால், இந்த ஊமை ஜனங்கள் இன்னும் இரண்டு மாதத்தில் பேசப் போகிறார்கள். இந்த ஊமை ஜனங்கள் நாடே கிடுகிடுக்க, ஸ்தம்பிக்க, ஊமை ஜனங்களாக இருந்தவர்களுக்கு இவ்வளவு தைரியம், துணிச்சல் எப்படி வந்தது என்று மற்றவர்கள் பேசும் அளவுக்கு ஆட்சியில் இருப்பவர்களுடைய படை சாய, கோலோச்சுவது போதுமடா சாமி என்று ஓட பேசப் போகிறார்கள். இந்த நாடு அதனை பார்க்கத்தான் போகிறது. ஏன் உங்களது அப்பா வீட்டுச் சொத்திலா நான் 10.5 சதவீதம் கேட்கிறேன்? இது எங்கள் நாடு, இது எங்கள் பூமி, இது எங்களால் வளர்ந்தது, இது எங்கள் மண், உனக்கு இங்கே என்ன வேலை? உன்னிடம் போய் நான் 10.5 சதவீதம் கேட்க வேண்டுமா? எனக்கு அவமானமாக இருக்கிறது. உன்னை கோட்டையில் சந்திக்க வேண்டுமா? எனக்கு அவமானமாக இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை உன்னிடம் கேட்டால்..நீ மத்திய அரசை கை காட்டுகிறாய். அதற்கு எதுக்கு முதல்வர்? ஏதோ நடக்கப் போகிறது; நடத்திக் காட்டப் போகிறோம். அண்டம் கிடுகிடுங்க நடக்கப் போகிறது” என கூறியிருந்தார்.
இந்நிலையில் வயதில் மூத்தவர் என்றாலும், முதலமைச்சருக்கான மரியாதையை ராமதாஸ் கொடுக்க வேண்டும் என அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னையில் இன்று ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் முதுகலை வைணவம் மற்றும் முதுகலை ஸ்ரீபாஷ்யம் ஆகிய வைணவ பாடங்களில் தேர்ச்சி பெற்ற 65 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஜீயர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளார்களிடம் பேசினார் சேகர்பாபு. அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினை பாமக நிறுவனர் ராமதாஸ் ஒருமையில் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது:-
நாட்டினுடைய முதலமைச்சர் என்ற வகையில் அதற்குண்டான மரியாதையை கொடுக்க வேண்டும். அவர் வயதில் மூத்தவராக இருந்தாலும் தர வேண்டும். எப்போதுமே திராவிட முன்னேற்ற கழகம் சந்திக்காத ஏச்சுகள் பேச்சுக்கள் கிடையாது. கலைஞரை கூட ஒரு சில சமயங்களில் விமர்சிக்கின்றார்கள். இப்படி விமர்சிப்பவர்களை சீர்தூக்கிப் பார்த்தால் அவர்கள் தொடர்ந்து தமிழக மக்களால் புறக்கணிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். தொடர்ந்து வெற்றி வாய்ப்பை இழப்பவர்களாக இருப்பார்கள். அந்த விரக்தியில் தமிழக முதல்வர் நெஞ்சுரம் கொண்ட நேர்மையுடன் ஆட்சியை செலுத்தி மக்களின் நெஞ்சில் நீக்கமற நிறைந்து இருப்பதால் வஞ்சக எண்ணத்தோடு இப்படி பேசுகின்றனர். அந்த ஏசுக்களையும் பேச்சுக்களையும் பற்றி கவலைப்படாத முதல்வர்தான் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.