“மத்திய அரசு ஆட்சி அதிகார போதையில் தடுமாறக்கூடாது. அப்படி தடுமாறியவர்கள் காணாமல் போய்விட்டார்கள். மோடி ஆட்சி மிக விரைவில் வீழ்த்தப்படும்” என்று டி.ஆர்.பாலு எம்.பி கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக பாஜக அரசை கண்டித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் இன்று (ஜூலை 27) நடைபெற்றது. தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாடத்தை திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
பல்வேறு மாநிலங்கள் கொடுக்கும் நிதியை மத்திய அரசின் திட்டங்களுக்கு செலவு செய்து வருகிறார்கள். ஆனால், 40-க்கு 40 வெற்றியை இண்டியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்ததால் தமிழகத்துக்கு வாயில் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள். இன்னும் ஆயிரம் முறை 40-க்கு 40 வெற்றியை தமிழக மக்கள் எங்களுக்குத் தருவார்கள். பாசிச பாஜக அரசு இன்னும் எத்தனை நாளைக்கு நிதி தராமல் இருக்கமுடியும்? எத்தனை நாளைக்கு உங்கள் ஆட்சி இருக்கும். ஆட்சி அதிகாரம் கையில் இருக்கின்ற போதையில் தடுமாறக் கூடாது. இதுபோல் தடுமாறியவர்களை ரொம்பவே பார்த்துவிட்டோம். இது போல் ஆடியவர்கள் விலாசம் தெரியாமல் போய்விட்டனர்.
அதுபோல மோடி ஆட்சியும் மிக விரைவில் வீழ்த்தப்படும். சென்னைக்கு மத்திய அமைச்சர்கள் வருகிறார்கள், சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை எத்திசையிலும் பார்க்கிறார்கள், ரூ.63,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டுக் கொடுத்துவிட்டு பேசாமல் இருக்கிறார். எங்காவது இப்படி நடக்குமா? மத்தியில் நடப்பது அரசாங்கமா? அதற்கு பட்ஜெட் வேறா? சாலை வசதி என்றால் ஜெயலலிதாவுக்கும் மோடிக்கும் பிடிக்காது. சென்னை கடற்கரையிலிருந்து மதுரவாயல் போகும் மேம்பட்ட 19 கிலோ மீட்டர் சாலை 6 வருடங்களாக கிடப்பில் இருக்கிறது.
இப்போது அந்த திட்டத்தை செயல்படுத்துகிறார்களே அதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்று மத்திய அரசு கேட்கவில்லை. அந்தப் பணத்தை செலவு செய்து பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. மத்திய அரசு கொடுக்கவேண்டிய ரூ.63 ஆயிரம் கோடி எங்கே போனது? மக்களின் வரிப்பணம் மத்திய அரசிடம் சேர்ந்த பின் அதை பிரித்து தரவேண்டும். அதன்படி 42 சதவீத நிதி தமிழகத்துக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் செஸ் வரியில் 5.4 சதவீதமும் வரவில்லை, கேட்பதற்கு ஆள் இல்லை என்று மத்திய அரசு கருதிக்கொண்டு இருக்கிறது.
மக்களவை உறுப்பினராக பணியாற்றும் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உள்ளது. எங்களை ஏமாற்றாமல் அனைத்து வேட்பாளர்களையும் தேர்வு செய்த பெருமை தமிழக வாக்காளர்களுக்கு உண்டு, உங்கள் பாதம் தொட்டு வணங்கி உங்களுக்காக வரும் காலங்களிலும் பணியாற்றுவோம். உங்களை கண்கலங்கவிடுவதற்காக நாங்கள் நாடாளுமன்றம் செல்லவில்லை. எங்களை பணயம் வைத்தாவது செய்யவேண்டிய கடமைகளை மிக விரைவில் ஆற்றுவோம். இந்த திட்டம் முடியும் போது மத்தியிலும் திமுக கூட்டணி ஆட்சி வரும். இவ்வாறு அவர் பேசினார்.