மத்திய அரசுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நிதி ஒதுக்க மறுக்குது: பி.ஆர்.பாண்டியன்!

மத்திய அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதாக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டாவுக்கு நேற்று மாலை 3 மணியளவில் வினாடிக்கு 12000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் காவிரி டெல்டாவில் உள்ள கோரையாறு,பாமணி ஆறு, முள்ளியாறு உள்ளிட்ட ஆறுகளை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், “மத்திய அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் தமிழக மக்கள் விவசாயிகள் மிக பெரும் துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த செயல் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குழைக்கும் நடவடிக்கை ஆகும்” என்று குற்றம்சாட்டினார்.

காவிரி டெல்டாவில் வெண்ணாறு பாசன பகுதியில் கடல் முகத்துவார ஆறுகளை மறுசீரமைக்கும் பணிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கட்ட நிதிக்கு அனுமதிக்கப்பட்டு உலக வங்கி நிதி மூலம் ரூபாய் 960 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிவடைந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். 2வது கட்ட பணிக்கு கோரையாறு, பாமணி ஆறு உள்ளிட்ட பல்வேறு கிளை ஆறுகளை சீரமைக்க உலக வங்கி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நிதி தருவதற்கான ஒப்புதல் அளித்துள்ளனர் என்றும், அதனை பெறுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு உரிய அனுமதி வழங்க மறுத்துள்ளது. இதனால் கடந்த மூன்று ஆண்டு காலமாக பணிகள் மேற்கொள்ளாததால் ஆறுகள் புதர் மண்டி பாசன காலத்திலும், வெள்ள காலத்திலும் மிகப்பெரும் பேரிழப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்தார்.

தொடர்ந்து, “தமிழகத்தின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நிதி ஒதுக்கீடு பெற முடியாமல் மத்திய அரசு தடை செய்வதால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் விவசாயிகளும் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் உணவு உற்பத்தி மிகப்பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, உடனடியாக மத்திய அரசு உரிய நிதியை பெற அனுமதி வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

காவிரி – வைகை -குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு உடன் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், மறுக்கும் பட்சத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் என்று எச்சரித்த பி.ஆர்.பாண்டியன், நெல் விதைகள் தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு சாகுபடி மேற்கொள்வதற்கு ஊக்க நிதியாக ஏக்கர் ஒன்றுக்கு 15,000 முழு மானியத்தில் வழங்கிட முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் , தமிழ்நாடு அரசு கூட்டுறவு கடன் முழுமையும் தள்ளுபடி செய்து புதிய கடன் வழங்க முன்வர வேண்டும். குறுவைக்கு தொகுப்பு திட்டம் வழங்குவது போல சம்பாவிற்கும் தொகுப்பு திட்டம் வழங்கி விவசாயிகளை சாகுபடியில் ஈடுபட ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.