மத்திய அமைச்சர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி!

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ஹெச்.டி குமாரசாமிக்கு திடீர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. பிரஸ்மீட்டில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே குமாரசாமியின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதால் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் 2-வது மகன் எச்டி குமாரசாமி. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கர்நாடகா மாநில தலைவராக இவர் உள்ளார். கர்நாடகா முன்னாள் முதல்வரான இவர் அண்மையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சார்பில் மண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது பிரதமர் மோடியின் கேபினட்டில் கனரக தொழில்துறை அமைச்சராக உள்ளார். இவர் கர்நாடகாவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க வந்தார். குமாரசாமியுடன் கர்நாடக முன்னாள் முதல்வரும் அம்மாநில பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவும் வந்திருந்தார். குமாரசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க தயாரான போது.. திடீரென அவரது மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. இதைப்பார்த்த அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கையில் இருந்த துணியால் மூக்கை மூடிக்கொண்ட குமாராசாமி அவசர அவசரமாக தனது காரில் ஏறி மருத்துவமனைக்கு சென்றார். ஜெயநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு குமாரசாமி சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

முதல்வர் சித்தராமையாவிற்கு எதிரான மூடா முறைகேடு விவகாரம் கர்நாடகா அரசியலில் கடந்த சில நாட்களாக அனல் பறக்க வைத்துவருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகத்தான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க குமாரசாமி வந்திருந்தார். அப்போதுதான் அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கபட்டுள்ளது. சட்டையில் இரத்த கறைகளுடன் குமாரசாமி தனது காரில் ஏறி செல்லும் காட்சிகள் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

64 வயதான குமாரசாமி கடந்த மார்ச் மாதம் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். மருத்துவனையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாக அவரது மகன் நிகில் குமாரசாமி தெரிவித்து இருந்தார். குமாரசாமி ஏற்கனவே கடந்த 2007 மற்றும் செப்டம்பர் 2017 ஆகிய ஆண்டுகளில் இதே போன்ற சிகிச்சையை மருத்துமனையில் எடுத்துக்கொண்டார்.