சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 50 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான சில நாட்களில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறையில் இருந்தபடியே இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு வந்தார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 50 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.