எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி!

திமுக அமைச்சர் சிறையில் இருப்பதை மறைக்கவே எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கரூரில் உள்ள காட்டூர் என்ற பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலி ஆவணங்களை வைத்து வாங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் மீது விசாரணை நடந்து வந்த நிலையில், அவர் தலைமறைவானார். இந்தச் சூழலில் தான் கேரளாவில் பதுங்கி இருந்த அவரை கடந்த ஜூலை 16ம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.. இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையில் சமீபத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த எம்ஆர் விஜயபாஸ்கரை கரூர் – கோவை சாலையில் வடிவேல் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தார். எம்ஆர் விஜயபாஸ்கரின் உடல் நலம் குறித்துக் கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, வழக்கு தொடர்பாகவும் சுமார் 50 நிமிடங்கள் பேசினார். அப்போது தம்பிதுரை, திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர் எனப் பல அதிமுக முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர்.

ஏற்கனவே எம் ஆர் விஜயபாஸ்கரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி சண்முகம், வளர்மதி பரஞ்சோதி, உள்ளிட்ட பலர் சந்தித்து நலம் விசாரித்த நிலையில், இப்போது முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது..

சுமார் 50 நிமிட சந்திப்புக்குப் பிறகு கிளம்பிய எடப்பாடி பழனிசாமியிடம் இந்த வழக்கு குறித்துக் கேட்ட போது, இது பொய் வழக்கு என்றும் திமுக அமைச்சர் சிறையில் இருப்பதை மறைக்க வேண்டும் என்பதற்காகவே விஜயபாஸ்கர் மீது வழக்குப் போட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அந்த நிலத்திற்கும் எம்ஆர் விஜயபாஸ்கருக்கும் தொடர்பே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்கும் போது, “திமுக அமைச்சர் ஒருவர் சிறையில் இருக்கிறார். அவர் சிறையில் இருப்பதை மக்களிடம் இருந்து மறைக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு எம் ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்குப் போட்டுள்ளனர். இது முழுக்க முழுக்க பொய் வழக்கு..

அந்த சர்ச்சைக்குரிய நிலத்துக்கும் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.. ஆனாலும், வேண்டும் என்றே அவர் மீது பொய் வழக்குப் போட்டு இருக்கிறார்கள். அவர் மீது மட்டுமில்லை.. அதிமுகவை அழிக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்து வருகிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.