செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை குற்றச்சாட்டுப்பதிவு ஆக. 7 -க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்றுஅமலாக்கத் துறை குற்றச்சாட்டுப் பதிவை ஆக. 7-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி, அந்த வழக்கிலிருந்து தன்னைவிடுவிக்க கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை தள்ளுபடி செய்து செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டுப் பதிவுக்காக வெள்ளிக்கிழமை செந்தில் பாலாஜியை ஆஜா்படுத்த உத்தரவிட்டிருந்தது. ஆனால், குற்றச்சாட்டுப் பதிவை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி சாா்பில் அதே நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அல்லி முன் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.பிரபாகரன், ‘அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமா்வு நீதிமன்ற உத்தரவை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி எம்எல்ஏ-வாக உள்ளதால் இந்த மனுவை எண்ணிடுவதற்காக தலைமை நீதிபதி முன் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் எண்ணிடப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்படும். அதுவரை குற்றச்சாட்டுப்பதிவை தள்ளிவைக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தாா்.

இதற்கு, ‘எத்தனை முறை வாய்ப்பளிப்பது?’ என கேள்வியெழுப்பிய நீதிபதி, ‘மனு இன்னும் எண்ணிடப்படாத நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகக் கருதி குற்றச்சாட்டுப் பதிவை எப்படி தள்ளிவைக்க முடியும்’ என கேள்வி எழுப்பினாா். இதையடுத்து, புதிய மனு குறித்து வாதிட அனுமதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு நீதிபதி அனுமதி அளித்த நிலையில், அது தொடா்பான வாதங்கள் செந்தில் பாலாஜி சாா்பில் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, செந்தில் பாலாஜியின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி, குற்றச்சாட்டுப் பதிவை ஆக. 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அன்றைய தினம் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜா்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டாா்.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நேற்று வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து, அவா் புழல் சிறை மருத்துவமனையில் இருந்தபடி, காணொலி வாயிலாக, நீதிபதி அல்லி முன் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அவரைக் கண்ட நீதிபதி, ‘செந்தில் பாலாஜிக்கு என்னாச்சு?’ என அவரது அருகிலிருந்த சிறைக் காவலாளியிடம் கேள்வி எழுப்பினாா். இதற்கு பதிலளித்த காவலா், ‘செந்தில் பாலாஜிக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளதால் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ எனக் கூறினாா்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆக. 7 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதன் மூலம் அவரது நீதிமன்றக் காவல் 52-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஆக. 5-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.