மத்திய பிரதேசத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் பலி!

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கோவில் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டம் சாஹ்பூரில் 50 ஆண்டுகள் பழமையான ஹர்தவுல் பாபா கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக குவிந்திருந்தனர். அப்போது திடீரென கோவில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கோவில் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளில் சிக்கியவர்கள் அலறித்துடித்தனர். இந்த இடிபாடுகளில் சிக்கி 9 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் பாழடைந்த சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலியாகினர். அந்த துயரத்தின் சுவடு மறைவதற்குள் 9 குழந்தைகளை கோவில் சுவர் இடிந்து விழுந்து காவு வாங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக சாகர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஆர்யா கூறுகையில், கோவில் வளாகத்தில் உள்ள டெண்ட்டில் குழந்தைகள் அமர்ந்திருந்தனர். அப்போது குழந்தைகள் மீது சுவர் இடிந்து விழுந்தது. கனமழை தொடர்ந்து பெய்ததால் சுவர் இடிந்து விழுந்தது. இன்று காலை 8.30 மணிக்கு இந்த துயர சம்பவம் நடந்தது. இந்த விபத்தில் மொத்தம் 9 குழந்தைகள் பலியாகி உள்ளனர் என்றார். இத்துயர சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், உயிரிழந்த 9 குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ1 லட்சம் வழங்கப்படும் எனவும் மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.