கிண்டி பூங்காவுக்கான கட்டணம் அதிகமாக உள்ளதாகவும், இந்தக் கட்டணத்தை குறைக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள முக்கிய சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களில் கிண்டி சிறுவர் பூங்காவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் இந்தப் பூங்காவுக்கு 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவது வழக்கம். 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வனம் மற்றும் வனவிலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் வகையில், கிண்டி பூங்கா மறுவடிவமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தப் பூங்கா ரூ. 30 கோடி செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில், கிண்டி சிறுவர் இயற்கைப் பூங்காவின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் பூங்காவைத் திறந்துவைத்தார். தொடர்ந்து, பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வேடந்தாங்கல் பறவைகள் இருப்பிடத்தை திறந்து வைத்து, பூங்காவில் உள்ள பல்வேறு வசதிகளை முதல்வர் பார்வையிட்டார். தமிழகத்திலேயே முதல்முறையாக இந்தப் பூங்காவில் 2,800 சதுரமீட்டர் பரப்பளவில் மிகப்பெரிய நீர்வாழ் பறவைக்கூடம், விலங்குகள், பறவைகளின் விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் எல்இடி மின் திரைகள், வனஉயிரினம் குறித்த விழிப்புணர்வு மையம், நூலகம், செல்பி பாயிண்ட், நடைபாதைகள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பூங்காவை இலவசமாகப் பார்வையிடலாம். 5 முதல் 12 வயதுடையவர்களுக்கு ரூ. 10 மற்றும் பெரியவர்களுக்கு ரூ. 60 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தக் கட்டணம் ஏழை, எளிய மக்களுக்கான செலவை அதிகரிக்கும் என்றும், கட்டணத்தைக் குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தல் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
சென்னை கிண்டியில் புனரமைக்கப்பட்ட சிறுவர் இயற்கை பூங்காவை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்துள்ளீர்கள். இந்தப் பூங்காவில் 5 முதல் 12 வயதுடையவர்களுக்கு ரூ. 10, பெரியவர்களுக்கு ரூ. 60 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினரின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்குக்கான செலவினத்தை அதிகரித்துள்ளது. சிறுவர்கள் தனியாகப் பூங்காவிற்கு வரப்போவதில்லை. ஒரு குடும்பத்தில் உள்ள சிறுவர் வருகிறார் என்றால், அவருடன் அம்மா,அப்பா, உறவினர்கள் என்று குறைந்தது 2 முதல் 4 பேர் வரை வருவார்கள். அதனால் ஒரு குடும்பத்தினருக்கான கட்டணம் மிக அதிகமாக உள்ளது. எனவே, பெரியவர்களுக்கு ரூ. 60 நிர்ணயம் செய்திருப்பது நியாயமானதல்ல. சிறுவர்களுக்கு ரூ. 10 என்பதைப்போல பெரியவர்களுக்கான கட்டணத்தை ரூ. 20 என்று நிர்ணயம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பாகக் கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.