மின் கட்டணத்தை உயர்த்தியதற்காக போராடுபவர்கள், மத்திய அரசை எதிர்த்துத் தான் போராட வேண்டும் என திராவிட கழகத் தலைவர் கி,வீரமணி தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் திராவிட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, ராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு விழா மற்றும் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திராவிட கழகத் தலைவர் கி,வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருச்சி சிறுகனூரில் பெரியாரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 1 லட்சத்து 20 ஆயிரம் சதுரடி நிலப்பரப்பளவில், பெரியாரின் பன்முக சிறப்புகளை விளக்கும் வகையில், பெரியார் உலகம் உருவாக்கப்படுகிறது. அங்கு 95 அடி உயரத்தில் அவரது சிலையும், 45 அடி உயரம் பீடத்துடன் அமைய உள்ள அந்த இடத்தில், ஆராய்ச்சி. நூலகம், உள்ளிட்டவைகள் என சுமார் ரூ, 100 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் தொடங்கப்படும்.
இதே போல், காரைக்குடியில் வரும் ஆக.31-ம் தேதி அன்று மறைந்த குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு ஆண்டு விழா திராவிட கழகம் சார்பில் நடத்தப்படவுள்ளது. நீட் தேர்வை முதன்முதலில் தமிழகத்தில் தான் எதிர்த்தோம். தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் எதிர்க்கத் தொடங்கி உள்ளன. நீட் தேர்வை முற்றிலும் நீக்குவதே ஒரே தீர்வாகும்.
மத்திய அரசு அண்மையில் அறிவித்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி எதையும் அறிவிக்கவில்லை. பிகார், ஆந்திராவுக்கு கொடுத்து விட்டு, பாஜக அரசின் நாற்காலி ஆடக்கூடாது என்பதற்காக ஃபெவிக்கால் பட்ஜெட்டை போட்டுள்ளார்கள். தமிழகத்திற்கு கிள்ளி கூட கொடுக்காத மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் மத்திய அரசு அலுவலர்கள் பங்கேற்கலாம் என்ற அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதே போல் சம்ஸ்கிருத மொழி உயிரிழந்த மொழி. எனவே, ஒரு மொழிக்கு மட்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கியது சட்ட விரோதமானதாகும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தமிழக முதல்வர் என்ன என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதில் அவர், கொஞ்சம் கூட சமாதானப் படுத்திக்கொள்ளவில்லை. அவர் செய்ய வேண்டிய செய்து கொண்டிருக்கின்றார்.
மின் கட்டணத்தை உயர்த்தியதற்காக போராடுபவர்கள், மத்திய அரசை எதிர்த்து தான் போராட வேண்டும். மேலும், மின்வாரியத்திற்கு ஏராளமான கடன்கள் உள்ளது. அந்த கடன்களை நிவர்த்தி செய்ய வேண்டுமானால், உலக வங்கி உள்ளிடோர், கட்டணத்தை உயர்த்தினால் மட்டும் தான் நிதி வழங்குவோம் என் நிதித்துறையை நெருக்கடி செய்யும் போது, வேறு வழியில்லாமல் உயர்த்தி உள்ளனர். ஆனால் எங்கெங்கு குறைந்த அளவில் கட்டணத்தை நிர்ணயிக்க முடியுமோ அங்கே அந்த கட்டணத்தை நிர்ணயித்துள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.