அண்ணாமலை தலைமையில் வெளியுறவு அமைச்சரை சந்தித்த மீனவ பிரதிநிதிகள்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் டெல்லி சென்ற மீனவ பிரதிநிதிகள், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், 4 மாவட்டங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகளுடன் இன்று காலை டெல்லி சென்றிருந்தார் அண்ணாமலை. இந்த நிலையில், இன்று மாலை மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்த தமிழக மீனவர்கள், கடலில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையால் எதிர்கொள்ளும் பிரச்னைகளை விவரித்தனர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெய்சங்கர் பேசியதாவது:-

நமது மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது, ஒருவர் உயிரிழந்தது துரதிஷ்டவசமான சம்பவம். அண்ணாமலையுடன் முக்கிய சங்கங்களின் பிரதிநிதிகள் வந்துள்ளனர். அவர்களின் பிரச்னைகளை விளக்கிக் கூறினர். அவற்றில் சில வெளியுறவுத் துறை மற்றும் சில மீன்வளத்துறைக்கு சம்பந்தப்பட்டது. இந்த ஆலோசனையில் மீன்பிடித் தொழில் துறையின் செயலாளரும் கலந்து கொண்டார்.

இது அரசியல் பிரச்னையாக கருதக் கூடாது. மீனவர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் தொழில்சார்ந்த பிரச்னைகளாகும். இதனை தீர்ப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். மத்திய அரசும் மீனவர்களின் நலனுக்காக பணியாற்றி வருகின்றது. தற்போது 20 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவ சங்கங்களுடன் அரசு தரப்பில் கூட்டம் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.