சத்தியமூர்த்தி பவனில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிவகங்கை காங்கிரஸார் புகார்!

சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டத்துக்கு கட்சி நிர்வாகிகள் பலரை அழைக்கவில்லை என குற்றம்சாட்டி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சென்னை சத்தியமூர்த்தி பவனில் நூற்றுக்கணக்கானோர் கோஷமிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நூற்றுக்கணக்கானோர் இன்று திங்கள்கிழமை வந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்ததால் சத்தியமூர்த்தி பவனில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை கூட்ட அரங்கில் அமருமாறு கேட்டுக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அப்போதும் கார்த்தி சிதம்பரத்தைக் கண்டித்து கட்சியினர் கோஷமிட்டனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். அதையடுத்து கே.ஆர்.ராமசாமி தலைமையில் செல்வப்பெருந்தகையிடம் புகார் கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், “கார்த்தி சிதம்பரம், அவரது ஆதரவாளர்கள், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் ஆகியோர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டத்தை நடத்தினர். அந்தக் கூட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அழைக்கப்படவில்லை. அந்தக் கூட்டத்தில் தாங்களும் கலந்து கொண்டீர்கள். இது, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேதனையை தந்துள்ளது. அக்கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம் கட்சியை தனது சொத்து போல நினைத்து கூட்டணியை உடைக்கும் வகையில் பேசியுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளையும் அழைத்து மீண்டும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ ராமசாமியிடம் கேட்டபோது, “மாநிலத் தலைவர் கலந்துகொண்ட சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டத்துக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் 80 சதவீதம் பேருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த தவறை செய்தது யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என்று புகார் கடிதம் கொடுத்துள்ளோம். அதில், இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த கார்த்தி சிதம்பரம் மற்றும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் ஆகியோரது பெயரைக் குறிப்பிட்டுள்ளோம். புகாரைப் பெற்றுக் கொண்ட மாநிலத் தலைவர், டெல்லிக்குப் போய் இந்த பிரச்சினை குறித்து கட்சி மேலிடத்தில் பேசிவிட்டு சொல்கிறேன்” என கூறியதாக தெரிவித்தார்.

இதுபற்றி கார்த்தி சிதம்பரம் எம்.பி.யிடம் கேட்டபோது, “எனக்கு எதிராகப் புகார் கொடுத்தது பற்றி தெரியாது. இதைப்பற்றி எனக்கு ஒரு கருத்தும் கிடையாது. எந்தக் கருத்தும் இல்லை” என்று மட்டும் கூறினார்.