வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சவுமியா அன்புமணி ஆகியோர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது சண்முகவிலாச மண்டபத்தில் துலாபாரத்தில் எடைக்கு எடை அரிசி வழங்கினர். தொடர்ந்து சூரசம்ஹார மூர்த்தி சன்னதி்யில் சத்ரு சம்ஹார பூஜை மற்றும் யாகம் நடத்தி வழிப்பாடு நடத்தினர். பின்னர் கோயில் வளாகத்தில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசின் பிஆர்ஓ சில பொய்யான தகவல்களை தயார் செய்து தமிழகத்தின் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்து, இந்த செய்தியை அவசியம் போட வேண்டும் என வற்புறுத்தியதால், சில செய்திதாள்களில் ஒரு செய்தி வந்துள்ளது. வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதனை கண்டிக்கிறோம். இதை அரசாங்கமே செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் கட்சிகள் செய்தால் வேறு. தமிழக அரசே செய்தால், அது மோசடி மற்றும் கோழைத்தனம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் ஏ, பி பற்றி தகவல்கள் இல்லை. அதிகமாக குரூப் சி, குரூப் டி-யில் வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் குரூப் ஏ மற்றும் பி எவ்வளவு கிடைத்துள்ளது என்பதைத் தெரிவிக்கவில்லை. வன்னியர் சமுதாதயத்தை திட்டமிட்டு இழிவுப்படுத்தியுள்ளனர். இது எவ்வளவு பெரிய மோசடி என்பதை பார்க்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடையே குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
சமூக நீதியை பற்றி முதல்வருக்கு தெரியவில்லை. இது சரியான போக்கு கிடையாது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியிலில் மொத்தம் 115 சமுதாயம் உள்ளன. இதில் 114 சமுதாயம் மொத்தமுள்ள தொகையில் 6.7 சதவீதம் உள்ளனர். மீதமுள்ள ஒரு சமுதாயம் வன்னியர் மட்டும் 14 சதவீதம் உள்ளனர். இந்த 115 சமுதாயத்தில், கடந்த 30 ஆண்டுகளில் எந்தெந்த சமுதாயத்துக்கு என்ன வேலை, கல்வி கிடைத்தது என்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். எந்தெந்த சமுதாயத்துக்கு என்னென்ன மருத்துவம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை முழுமையாகக் கூற வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. எங்களுக்கு சமூக நீதி தான் முக்கியம். அதற்கு பிறகு அரசியல். தமிழக அரசு கோழைத்தனமாக பொய்யான தகவல்களை வெளியிட்டு சமுதாயத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். நெருப்பில் கை வைத்துள்ளனர். அது சுட்டுவிடும்.
மத்திய அரசு பாராபட்சம் இல்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நிதி கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் எல்லாவற்றுக்கும் மத்திய அரசை எதிர்பார்க்கக் கூடாது. மாநில அரசு 4 லட்சம் கோடி பட்ஜெட் போட்டுள்ளனர். அதில் ரூ. 2 ஆயிரம் கோடியை பேரிடருக்கு ஒதுக்க முடியாதா?. தமிழக அரசும் பட்ஜெட்டில் பேரிடருக்கு நிதி ஒதுக்க வேண்டும். இதைவிட பெரிய வெள்ளம், வறட்சி எல்லாம் வரும் போது, நாமே அதை எதிர்கொள்ள வேண்டும். அது தான் நல்ல நிர்வாகம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது. கொலை, கொள்ளைகள், பள்ளி மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது. இதை தடுக்க முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.