“தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது” என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை அருகே திருமயம் அருகே கடையக்குடியில் இன்று (ஆக.5) புதிய சமத்துவபுரம் கட்டுமானப் பணியை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஒரு ஆட்சியை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது வழக்கம். அதற்காக தனிநபர் விரோதத்தினால் நடக்கும் கொலை சம்பவத்தை அரசோடு தொடர்புபடுத்துவது தவறு. இதுபோன்ற சம்பவங்களுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்றாலும், தடுக்க வேண்டியது அரசின் கடமை என்பதனால் முன்னெச்சரிக்கையாக ரவுடிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத்தான் செய்ய முடியுமே தவிர, ஒவ்வொருவரின் இதயத்திலும் என்ன இருக்கிறது? என்று ஊடுருவிச் சென்று பார்க்க முடியாது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குற்றச் செயல்கள் குறைவாகத்தான் உள்ளது. அதனால் தான் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என்று கூறுகிறோம்.
இம்மாதம் தமிழகத்தில் நிறைய தொழிற்சாலைகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார். அமைதி பூங்காவாக இருப்பதனால்தான் தொழில் அதிபர்கள் தமிழகத்தை நோக்கி வருகிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.புதுக்கோட்டையில் தற்காலிக பேருந்து நிலையம் ஏற்பாடு செய்ததும் பழுதடைந்துள்ள பேருந்து நிலைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.