ஆயுள் காப்பீடு மற்றும் சுகாதார காப்பீடு பிரீமியம் மீதான 18 சதவீத பொருள்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடாளுமன்றத்தின் மகர் துவார் செல்லும் படிக்கட்டிகளில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. ஆர்ப்பாட்டத்தின்போது “வரி பயங்கரவாதம்” என்ற பதாகைகளை கைகளில் ஏந்தி, ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு பிரீமியம்களுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.கள் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பினர். அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதேபோல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை முடிந்தால் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.