வங்கதேசத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 24 பேர் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவாமி லீக்கின் பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஷாஹின் சுக்லதார் என்பவருக்கு சொந்தமான நட்சத்திர ஒட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். ஓட்டலில் தங்கியிருந்த வாடிக்கையாளர்களில் 24 பேர் தீயில் சிக்கி உயிரோடு எரிந்து பலியாகினர்.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர்தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு சார்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து வங்கதேச கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் கடந்த ஜூனில் போராட்டம் தொடங்கினர். இதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். 2,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கை கடந்த ஜூலை 21-ம் தேதி விசாரித்த வங்கதேச உச்ச நீதிமன்றம், வங்கதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மாணவர்களின் போராட்டம் ஓய்ந்தது.
இதனை அடுத்து, போராட்டத்தை முன்னின்று நடத்திய 6 பேரை போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் மாணவர் சங்க மூத்த தலைவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மாணவர் அமைப்பினரின் போராட்டம் தீவிரமடைந்து. இதனால் நிலைமையை சமாளிக்க முடியாமல் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து லண்டல் செல்வதற்காக இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனை அடுத்து அங்கு இடைகால ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் அவாமி லீக்கின் பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஷாஹின் சுக்லதார் என்பவருக்கு சொந்தமான நட்சத்திர ஒட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதில் ஓட்டலில் தங்கி இருந்த வாடிக்கையாளர்களில் 24 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வங்கதேசம் முழுவதும் அவாமி லீக் கட்சிக்கு சொந்தமான பல வர்த்தக நிறுவனங்களும், வீடுகளும் கலவரக்காரர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது. வங்கதேசத்தில் ஆட்சி நிர்வாகத்தை ராணுவம் மேற்கொண்டுள்ள போதிலும் வன்முறை இன்னும் முடிவுக்கு வராததால் பதற்றம் நீடிக்கிறது.