திரவுபதி முர்முவுக்கு ஃபிஜியின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

ஃபிஜி நாட்டின் உயரிய சிவிலியன் விருதான ‘கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர்’ விருது இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நேற்று வழங்கப்பட்டது.

இந்தியாவின் கிழக்குக் கொள்கையை மேலும் வலுப்படுத்தும் விதமாக மூன்று நாடுகளுக்கு ஆறு நாட்கள் சுற்றுப் பயணத்தை திரவுபதி முர்மு மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக ஃபிஜி நாட்டுக்கு சென்ற அவர் அங்கிருந்து நியூஸிலாந்து மற்றும் திமோர்-லெஸ்டே நாடுகளுக்கும் செல்கிறார். ஃபிஜி சுற்றுப்பயணத்தின் போது, இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான ‘‘கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர்’’ விருது வழங்கப்பட்டது. ஃபிஜி அதிபர் ரது வில்லியம் மைவலிலி கடோனிவேரே முர்முவுக்கு நேற்று இந்த விருதை வழங்கினார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இதுகுறித்து கூறியதாவது:-

ஃபிஜி நாட்டின் உச்சபட்ச விருதுக்கு என்னை தேர்வு செய்ததற்கு நன்றி. இருநாடுகளுக்கும் இடை யிலான ஆழமான நட்புறவின் பிரதிபலிப்பே இந்த விருது. வலிமையான, நெகிழ்ச்சியான, வளமான நாட்டை கட்டியெழுப்ப ஃபிஜிக்கு உதவிட இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது. துடிப்பான ஜனநாயகம், பலதரப்பட்ட சமூகம், சமத்துவம் மீதான நம்பிக்கை, தனிமனித உரிமை, கண்ணியத்திற்கான அர்ப்பணிப்பு உள்ளிட்டவை இந்தியாவையும் ஃபிஜியையும் இணைக்கும் பாலமாக உள்ளன. 145 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு வந்த இந்திய வம்சாவளி மற்றும் அவரது சந்ததியினர் ஆரம்பகால ஆபத்து மற்றும் கஷ்டங்களை கடந்து புதிய ஃபிஜியை கட்டியெழுப்பியதில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

சுவாவில் அறிவிக்கப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி கார்டியாலஜி மருத்துவமனை போன்றபுதிய திட்டங்கள் பிஜி மக்கள் மற்றும் பரந்த பசிபிக் பிராந்தியத்தின் முன்னுரிமைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும். இவ்வாறு திரவுபதி முர்மு கூறினார்.