இஸ்லாமியர்களை அன்னியர்களைப் போல மாற்றுகிற முயற்சி வேதனை அளிக்கிறது: திருமாவளவன்

மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இன்று லோக்சபாவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூவால் தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபாவில் மசோதா மீது பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி, மத சுதந்திரத்தில் தலையிடக் கூடிய- மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடிய மசோதா இது; அறிமுக நிலையிலேயே இதனை எதிர்த்து திரும்பப் பெற வலியுறுத்துகிறோம் என்றார்.

முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நலன்களைப் பாதுகாக்கக் கூடியது வக்பு வாரியம். மத்திய வக்பு வாரியம், மாநிலங்களில் வக்பு வாரியங்கள் செயல்படுகின்றன. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2013-ம் ஆண்டு வக்பு வாரியத்துக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. தற்போதைய மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வக்பு வாரியத்தின் அதிகாரங்களைப் பறித்து 40 திருத்தங்களுடனான மசோதாவை தாக்கல் செய்துள்ளது. லோக்சபாவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ இந்த மசோதாவை இன்று தாக்கல் செய்தார். லோக்சபாவில் அறிமுக நிலையிலேயே இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சியின் வேணுகோபால், திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.

இந்த மசோதா மீது லோக்சபாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி பேசியதாவது:-

அறிமுக நிலையிலேயே இந்த மசோதாவை நான் கடுமையாக எதிர்க்கிறேன். நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடிய வகையில், மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்திய உணர்வுடன் வாழுகிற இஸ்லாமியர்களை அன்னியர்களைப் போல மாற்றுகிற முயற்சி வேதனை அளிக்கிறது. அவர்களுக்கான சுதந்திரத்தில் தலையிடுவது என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிற அனைத்து சுதந்திரம் மற்றும் உரிமைகளை எல்லாம் தட்டிப் பறிக்கிற வகையில் வேண்டும் என்றே திட்டமிட்டு இதில் அரசு தலையிடுகிறது.

வக்பு போர்டு நீண்ட நெடுங்காலமாக தனித்து இயங்கி வருவதை நாம் அறிவோம். ஒவ்வொரு மதத்துக்கும் என சுதந்திரம் இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது. இந்த நிலையில் அரசு, மதம் சார்ந்த நிலைப்பாட்டை எடுப்பது, மதங்களின் சுதந்திரத்தில் தலையிடுவது மிகுந்த ஆபத்தானது; மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடியது. எனவே இந்த மசோதாவை துவக்க நிலையிலேயே, அறிமுக நிலையிலேயே நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எதிர்க்கிறேன். இதனைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இதனை நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தொல். திருமாவளவன் எம்பி பேசினார்.