சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்!

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

பெண் காவலர்கள் மற்றும் காவல் துறை பெண் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக அவர் மீது சென்னை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி என தமிழகம் முழுவதும் 16 காவல் நிலையங்களில் இதே குற்றச்சாட்டுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல சவுக்கு சங்கர் மீது வேறு சில குற்றச்சாட்டுகளுக்காகவும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவரது தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் இன்று (ஆக.9) தீர்ப்பளித்தனர். அதன்படி, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், “வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யலாம்” என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

முன்னதாக இந்த வழக்கின் விசாரணையின்போது, “சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தவறான தகவலின் அடிப்படையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்” என்று சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. அதற்கு பதில் கொடுத்த காவல்துறை, “சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதை தடுக்கவே குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.” என்று விளக்கமளிக்கப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதிகள், “சவுக்கு சங்கர் பேசியது கண்டனத்துக்குரியது என்றாலும்கூட, அவர் மீது அதற்காக வழக்குப் பதிந்து தண்டனை பெற்றுத் தரலாமே தவிர, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது தவறு. திரைப்படங்களில் கூட தான் காவல்துறை, நீதிமன்றம், நீதிபதிகள் மீது விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. அப்படியானால், அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கட்டுமா?. அதுமட்டுமில்லை, ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தடுப்பு காவல் சட்டத்தை தற்போது பயன்படுத்தினால், அது நம்மை ஆங்கிலேயே ஆட்சிக்கு கொண்டுச் சென்று விடும்.” என்று கூறியிருந்தனர்.