வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.15 கோடி நிவாரண நிதியை தர தயாராக உள்ளதாக மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுகேஷ் சந்திரசேகர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
கேரளாவில் நிகழ்ந்துள்ள சம்பவம் என்னை மிகவும் வேதனைப்பட வைத்துள்ளது. இக்கட்டான இந்த சூழ்நிலையில், எனது பங்களிப்பாக ரூ.15 கோடி நிவாரண தொகையை வழங்க தயாராக உள்ளேன். மேலும், 300 வீடுகளை உடனடியாக கட்டித் தரவும் ஆவலுடன் உள்ளேன். இதனை சட்டபூர்வமான வங்கி கணக்குகளில் இருந்து அளிக்கிறேன். கேரள முதல்வர் இந்த நிவராண உதவியை பெரிய மனதுடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தை சுகேஷ்தான் எழுதியுள்ளார் என்பதை அவரது வழக்கறிஞர் அனந்த் மாலிக் உறுதி செய்துள்ளார். ஆனால், சுகேஷ் சந்திரசேகரின் கடிதத்துக்கு கேரள அரசு இன்னும் பதிலளிக்கவில்லை. பல முக்கிய பிரமுகர்களிடம் பண மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.