ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, பா.ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீது வழக்கு!

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, அவருடைய இரண்டு வயது மகள், இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 1500 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வேறு, சரணடைந்திருப்பவர்கள் வேறு என தமிழக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது. இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை இல்லாத நிகழ்வாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், அதிமுக, திமுக, பாஜக, தாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு சென்னையில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டலில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. இதில் இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், அட்டகத்தி தினேஷ், வில்லன் நடிகர் தீனா, தலித் கூட்டமைப்பினர், சமூக செயல்பாட்டாளர்கள், பல கட்சிகளின் பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நியமிக்கப்பட்டார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பகுஜன் சமாஜ் கட்சியினர், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, அவருடைய இரண்டு வயது மகள், இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு தலித் சமூக செயற்பாட்டாளர்கள், அமைப்புகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். நீதி வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கமிட்டனர்.

இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொற்கொடி உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அனுமதியின்ற கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். மேலும் இயக்குனர் பா.ரஞ்சித், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட 1500 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல்துறையினர்.