முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் இன்று (சனிக்கிழமை) காலை தனது மனைவியுடன் தேநீர் அருந்தும் புகைப்படத்தினைப் பகிர்ந்து பதிவிட்டுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.
அதில் அவர், “17 மாதங்களுக்குப் பின்னர் அருந்தும் சுதந்திரத்தின் முதல் காலை தேநீர். இந்த சுதந்திரம் இந்திய அரசியலமைப்பு இந்தியர்களான அனைவருக்கும் கொடுத்த வாழ்வதற்கான உரிமையாகும். இது இறைவன் நமக்கு அனைவருடனும் திறந்தவெளியில் சுவாசிக்கக் கொடுத்த சுதந்திரம் ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நேற்று வெள்ளிக்கிழை தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் மணிஷ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
முன்னதாக நேற்று சிறையில் இருந்து விடுதலையான அவர், “உங்கள் அன்பு, கடவுளின் ஆசிர்வாதம் மற்றும் சத்தியத்தின் வலிமையால், நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவை எல்லாவற்றையும் விட, எந்தவொரு சர்வாதிகார அரசும் ஆட்சிக்கு வந்தால், சர்வாதிகார சட்டங்களை உருவாக்கி எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்தால், அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் அவர்களைப் பாதுகாக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த அதிகாரத்தின் மூலம் அரவிந்த் கேஜ்ரிவாலும் சிறையிலிருந்து வெளியே வருவார் என்று நான் உறுதியளிக்கிறேன்,” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.