“சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி எந்த கோயிலையும் பூட்டி வைக்கக் கூடாது” என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது” என்று அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள முத்தாலம்மன் மாரியம்மன் திருக்கோயிலை திறக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று மதுரை உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பினை வழங்கி உள்ளது. இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கோயிலைப் பூட்டி சீல் வைப்பதால், சாமிக்கு பூஜைகள் நடத்துவது தடுக்கப்படுகிறது. கோயிலைப் பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம். குற்ற வழக்கில் சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது.
கோயிலை பூட்டுவதால் சாமிக்கு தேவையான பூஜை உள்ளிட்ட தேவைகள் கிடைக்கப் பெறுவதில்லை. கோயிலை காலவரையறையின்றி மூடி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளை அதிகாரிகள் வேடிக்கை பார்க்க கூடாது. கோயிலைத் திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும். இதில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, எந்த கோயிலையும் பூட்டக் கூடாது என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்பிற்குரியதாகும்
கடந்த சில வருடங்களாக சில நாத்திக, இந்து விரோத கும்பல்கள் இந்து ஆலயங்களில் இரு பிரிவினரிடையே மோதல்களை தூண்டிவிட்டு அதன் மூலமாக கோயில்களை பூட்டி போடும் செயல்கள் பல இடங்களில் அரங்கேறி வருகிறது. கோயிலைத் திறந்தால் பிரச்சினை வரும் எனக் கூறி பல ஆண்டுகளாக கோயில்களில் எந்த பூஜையும் செய்யாமல் பூட்டிப் போட்டு இருளடைய செய்து வருகின்றனர். கோயில் என்பது இறைவன் வாழும் இடம். இந்து சமயத்தில் இறைவனுக்கு பூஜை முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதனை தடுப்பதால் பல தீமைகள் ஊருக்கு ஏற்படும் என்பது ஐதீகம். கரானா பெருந்தொற்று சமயத்தில் கூட பூஜை செய்வது தடுக்கப்படவில்லை.
ஆனால், வேற்று மத வழிபாட்டுத் தலங்களில் அல்லது பல பொது இடங்களில் பிரச்சினைகள் நிகழ்ந்தால் இதுபோல் கோயில்களை மூடி சீல் வைப்பதில்லை. இத்தனைக்கும் அவை பிரார்த்தனை கூடங்கள் தான். ஆனால் அவர்களின் மத விஷயத்தில் அரசும் அதிகாரிகளும் மிகுந்த கவனமுடன் கையாண்டு அவற்றுக்கு சீல் வைப்பதை தவிர்க்கின்றனர். இந்துமத வழிபாட்டு தலங்கள் மட்டும் திட்டமிட்டு சில சதி செயல்களின் பின்னணியில் பூட்டப்படுகிறது என இந்துமுன்னணி நெடுங்காலமாக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆலயங்களையும் ஆன்மிகத்தையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து மக்களின் சிந்தனையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை இந்துமுன்னணி மனதார வரவேற்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.