தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று ஈரோடு அரசு மருத்துவமனையில் ஏசி வசதி, தொலைக்காட்சியுடன் கூடிய கட்டண படுக்கை அறை வசதியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பேசிய மா சுப்பிரமணியன், தமிழகத்தில் 16 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதி செய்யப்படும் என்று தெரிவித்தார்
ஈரோடு அரசு மருத்துவமனையில் குளிர்சாதன வசதி, தொலைக்காட்சி வசதியுடன் கூடிய சிறப்பு கட்டண அறை வசதியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏசி மற்றும் தொலைக்காட்சி வசதியுடன் கூடிய கட்டண படுக்கை அறை வசதி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கடந்த பட்ஜெட்டின் போது தமிழகத்தில் 16 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ஈரோடு அரசு மருத்துவமனையில் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவை, மதுரை, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் இந்த கட்டண படுக்கை அறை திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது ஈரோட்டில் 20 கட்டண படுக்கை அறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டண அறையில், குளிர்சாதன வசதி, தனி கழிப்பறை, தனி குளியல் அறை, தொலைக்காட்சி பெட்டி ஆகிய வசதிகள் உள்ளன. இதற்கான கட்டணங்கள் எவ்வளவு? என்பது பற்றி அதிகாரிகள் அறிவிப்பார்கள்.
முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் 1,900 மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று புகார் வந்தது என்றால் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.