காசாவில் உடனடி போர் நிறுத்தம்: பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி கூட்டாக அறிக்கை!

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ள நிலையில், போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கூட்டாக அறிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது. போரில் இதுவரை 39,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டிணியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது.

காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது. போர் தொடங்கி 300 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், இந்த போரின் நோக்கத்தை இஸ்ரேல் நிறைவேற்றியிருக்கிறதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கான பதிலை இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்திருக்கிறார். “ஹமாஸ் என்பது ஒரு சிந்தனை, ஹமாஸ் ஒரு கட்சி, இது மக்களின் இதயங்களில் வேரூன்றியிருக்கிறது. ஹமாஸை ஒழிக்க முடியும் என்று நினைப்பது தவறு” என்று கூறியுள்ளார். போர் தொடங்கி 8 மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் இதனை ஒப்புக்கொண்டிருக்கிறது. ஹமாஸின் சுரங்கப்பாதைகள், அதன் முன்னணி வீரர்கள் மற்றும் தலைவரை அழித்து அவர்கள் பிடியில் உள்ள 240க்கும் மேற்பட்ட பணயகைதிகளை மீட்க இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. ஆனால், 8 மாதங்கள் ஆன பின்னரும் இந்த இலக்கை எட்ட முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது.

மறுபுறம் காசாவின் குடிநீர் தேவையில் 90% பூர்த்தி செய்யப்படவில்லை. எனவே அங்கு மிகமோசமான சுகாதார நிலை நிலவி வருகிறது என ஐநா தெரிவித்திருக்கிறது. அதாவது காசவில் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீரை பரிசோதித்ததில் அதில் போலீயோ வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக உடனடியாக அங்கிருந்து சுமார் 14 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட வேண்டும் என்று ஐநா கூறியிருந்தது.

இந்நிலையில் போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கூட்டாக அறிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் கூட்டாக இந்த அறிக்கையை விடுத்துள்ளனர். இதில், “சண்டை முடிவுக்கு வர வேண்டும். ஹமாஸால் பிடித்து வைத்திருக்கும் அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்க வேண்டும். காசா மக்களுக்கு அவசர உதவி தேவை. அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்கள்.