கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்தார்.
4-வது நாளாக மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் இன்று (திங்கள் கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்தார். மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார். பதவி விலகியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் கோஷ், “இறந்து போன மருத்துவரும் என் மகள் போன்றவர்தான். ஒரு பெற்றோராக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்க நான் விரும்பவில்லை” என்று கூறினார்.
முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சஞ்சய் வசிஸ்ட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், “ஆக.18-ம் தேதிக்குள் மாநில போலீஸார் வழக்கை முடிக்கத் தவறினால், வழக்கு விசாரணை சிபிஐ-வசம் ஒப்படைக்கப்படும்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தை இன்று (ஆக.12) நேரில் சந்தித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அப்போது, “மருத்துவரின் குடும்பம் விரும்பினால், இந்த கொலை வழக்கின் விசாரணையை மத்திய ஏஜென்சிகளிடம் வழங்கத் தயார் என்றும், மத்திய ஏஜென்சிகள் மூலம் விசாரணை செய்வதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மம்தா பானர்ஜி தனது அறிவிப்பில், “மாநில காவல்துறை இந்த வழக்கின் குற்றவாளிகளை வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் வழக்கை முடிக்கத் தவறினால், வழக்கின் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர், கடந்த 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட பெண் மருத்துவர் அங்கு முதுநிலை மருத்துவப் படிப்பு பயின்று வந்தார். இந்த கொலை தொடர்பாக காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொலை கொல்கத்தாவில் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கொலை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளியை கைது செய்யக்கோரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கிய போராட்டம் பின்னர் மேற்குவங்கம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கும் பரவியது. இதனால் மேற்குவங்கத்தில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று (ஆக.12) நாடு முழுவதும் மருத்துவமனைகளில் போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள பத்து அரசு மருத்துவமனைகளில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடங்கியுள்ளனர். டெல்லியில் இயங்கிவரும் மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, ஆர்எம்எல் மருத்துவமனை, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, விஎம்எம்சி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை, தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனை, ஜிடிபி, ஐஎச்பிஏஎஸ், டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி, தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் மருத்துவமனை பணியாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 லட்சம் மருத்துவ பணியாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கோரி FORDA மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை இன்று நடத்தி வருகிறது. லோக் நாயக் மருத்துவமனை, டெல்லியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை போன்று நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளுக்கு வெளியே திரண்ட மருத்துவர்கள், பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
போராட்டம் தொடர்பாக பேசியுள்ள FORDA பொதுச் செயலாளர் சர்வேஷ் பாண்டே, “நாடு முழுவதும் உள்ள சுமார் 3 லட்சம் மருத்துவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மற்ற மருத்துவர்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கைக்கு எழுத்துபூர்வ உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் மத்திய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்க வேண்டும் என்பது எங்களின் முக்கியமான கோரிக்கை” என்று கூறியுள்ளார்.